/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு கட்டுமான பணி 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அதிருப்தி
/
எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு கட்டுமான பணி 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அதிருப்தி
எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு கட்டுமான பணி 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அதிருப்தி
எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு கட்டுமான பணி 4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அதிருப்தி
ADDED : நவ 24, 2024 12:17 AM

வியாசர்பாடி, )
வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 1987ல் கட்டப்பட்டது. இங்கு, 'ஏ, பி, சி, டி, இ' பிளாக்குகளில் உள்ள, 180 வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் வசித்தனர்.
இந்த கட்டடம் பாழடைந்து அபாயகரமாக இருந்தது. எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், அபாயகரமான வீடுகளை இடித்து விட்டு, புதிய கட்டடங்கள் கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது.
புதிதாக, 45 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில், 288 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது.
தரை தளத்துடன் ஐந்து மாடிகள் அமைய உள்ள இக்கட்டடத்தில் மின்துாக்கி, ஜெனரேட்டர் வசதி, பால்கனி, மரக்கதவுகள், டைல்ஸ், வெஸ்டன் கழிப்பறை வசதியுடன், ஒரு வீடு 411 சதுர அடியில் அமைய உள்ளதாக, வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, எம்.ஜி.ஆர்.,நகரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது. இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு, ஒரு வீட்டிற்கு கருணைத் தொகையாக, தலா 8,000 ரூபாயும், ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட்டது.
பின், 2021ல், எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு இடிக்கப்பட்டது. இதன் பின், 2021 ஜூலை 8ம் தேதி, புது கட்டடம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்து, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.
துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டி மூன்று ஆண்டுகளாகியும், இதுவரை கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை.
இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ., சேகர், கலெக்டர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில், எம்.ஜி.ஆர்., நகர் மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
மூன்று முறை, வியாசர்பாடி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் நடவடிக்கை இல்லாததால், எம்.ஜி.ஆர்., நகர் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், ஒரு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை கட்டும் போது, கட்டட அனுமதி, இட அனுமதி, குடிநீர் வாரியம், மின்சார துறை என, எந்த ஒரு துறையிலும் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது.
தற்போது பழுதடைந்த அந்த கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டும் போது, அதை வரைமுறை செய்ய வேண்டி உள்ளது.
தற்போது கட்டட அனுமதி, இட அனுமதி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், மின்சார துறை அனுமதி பெற்றால் மட்டும் கட்ட முடியும். நிர்வாக ரீதியான பிரச்னையை தீர்க்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால், தற்போது கட்டப்படும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டடங்களில் காலதாமதம் ஏற்படுகிறது.
வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பின் பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது. புதிய டெண்டர் ஓரிரு நாட்களில் விடப்பட உள்ளது. பின், டிசம்பர் 15ம் தேதிக்குள் கட்டுமான பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.
இதுகுறித்து, எம்.ஜி.ஆர்.,நகரைச் சேர்ந்த அருண், 31, என்பவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பை இடிக்கும் போது, ஆறு மாதங்களுக்குள் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவித்தனர். ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரை ரத்து செய்து விட்டு, தி.மு.க., ஆட்சிக் காலத்தில் புதிய ஒப்பந்தம் விடப்படுகிறது. ஆட்சியாளர்களின் சுயநலத்தால், அப்பாவி மக்கள் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.
வீடுகளை விட்டு வெளியில் தங்கியுள்ள பயனாளிகள், வாடகை செலுத்த முடியாமல் தவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.