/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் நிறுத்தத்தில் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதால் அதிருப்தி
/
பஸ் நிறுத்தத்தில் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதால் அதிருப்தி
பஸ் நிறுத்தத்தில் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதால் அதிருப்தி
பஸ் நிறுத்தத்தில் ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்பதால் அதிருப்தி
ADDED : மார் 15, 2024 12:45 AM

திருநின்றவூர், கடந்த 1970 முதல், திருநின்றவூர் வழியாக பூந்தமல்லிக்கு, அரசு பேருந்து தடம் எண் '54ஏ' பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஆவடி அடுத்த திருநின்றவூர், கன்னிகாபுரத்தில் உள்ள நிறுத்தத்தில், இப்பேருந்து நின்று செல்லும்.
திருநின்றவூர் ரயில் நிலையம் அருகில் இருப்பதால், கன்னிகாபுரம் மற்றும் திருவேங்கடம் நகரைச் சேர்ந்த பகுதிவாசிகள், இந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், திருவேங்கடம் நகரில் திருநின்றவூர் துணை தபால் நிலையம் செயல்படுவதால் நெமிலிச்சேரி, பாக்கம், மேலப்பேடு, புலியூர் உட்பட, திருநின்றவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 32 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ஓரிரு ஆட்டோக்கள் அங்கு நிறுத்தப்பட்டன.
காலப்போக்கில் ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரித்து, நாள்தோறும் 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், பேருந்து நிறுத்தத்தில் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், அரசு பேருந்துகள் திரும்ப வழியில்லாமல், ஓட்டுனர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
தவிர, வழியை மறித்து ஆட்டோக்கள் நிற்பதால் வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் தினமும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அவசரத்திற்கு, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பல புகார்கள் எழுந்தும், பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால், நாளுக்கு நாள் அங்கு அணிவகுக்கும் ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், இந்த பிரச்னையில் தலையிட்டு, இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பகுதிவாசிகள் கூறுகையில்,'கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

