/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பு அகற்ற மனு அளித்த சமூக ஆர்வலர் மீது தாக்குதல் தி.மு.க., பிரமுகர் அடாவடி
/
ஆக்கிரமிப்பு அகற்ற மனு அளித்த சமூக ஆர்வலர் மீது தாக்குதல் தி.மு.க., பிரமுகர் அடாவடி
ஆக்கிரமிப்பு அகற்ற மனு அளித்த சமூக ஆர்வலர் மீது தாக்குதல் தி.மு.க., பிரமுகர் அடாவடி
ஆக்கிரமிப்பு அகற்ற மனு அளித்த சமூக ஆர்வலர் மீது தாக்குதல் தி.மு.க., பிரமுகர் அடாவடி
ADDED : ஜன 29, 2025 12:38 AM

கொரட்டூர், கொரட்டூர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அன்புகுமார், 58; அன்பு கருணை இல்லம் நடத்தி வருகிறார்; சமூக ஆர்வலராகவும் இருக்கிறார்.
இவர், அறக்கட்டளை வாயிலாக முதியவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். மேலும், கொரட்டூர் பகுதியில் பல்வேறு முறைகேடுகள் குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில், 'வீடியோ' வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இவரது வீட்டின் அருகே 24,000 சதுர அடி பரப்பளவு உடைய சிவலிங்கபுரம் குளம் பூங்காவின், கிழக்கு வாசல் செல்லும் சாலை, ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி உள்ளது.
அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார் சாலை அமைக்க வேண்டும் என, அம்பத்துார் மண்டல அதிகாரிகளிடம் மனு அளித்தார். இதுகுறித்து அறிந்த, அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் அய்யப்பன், 38, அவரது கூட்டாளிகள், நேற்று மாலை அன்புகுமாரின் வீட்டிற்கு, சென்று அவரிடம் பேச்சு நடத்தினர்.
பின், ஆபாசமாக திட்டியதோடு, அன்புகுமாரின் 'டீ - ஷர்ட்'டை கிழித்து, அவரை கை, கால்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதியினர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். காயமடைந்த அன்புகுமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து போலீசார், தி.மு.க., பிரமுகர் அய்யப்பனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
தி.மு.க., பிரமுகரால் காயமடைந்த அன்புகுமார் கூறியதாவது:
சமூகத்தில் நல்லது நடக்க, நீர்நிலைகளை காக்க சமூக ஆர்வலர்களான நாங்கள் பாடுபடுகிறோம். ஆனால், கோரிக்கை மனு கொடுத்ததற்கு, வீடு புகுந்து என்னை தாக்குகின்றனர். போலீசார் முன்னிலையில் காலால் எட்டி உதைத்தனர். சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழக முதல்வரே, எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுகோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் நடந்த, கனிமவள கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, கடந்த 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவம் ஓய்வதற்குள், சென்னையில் சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

