/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவிலுக்கு 1.41 ஏக்கர் நிலம் தானம் தந்த ஆவணம் கண்டெடுப்பு
/
வடபழனி முருகன் கோவிலுக்கு 1.41 ஏக்கர் நிலம் தானம் தந்த ஆவணம் கண்டெடுப்பு
வடபழனி முருகன் கோவிலுக்கு 1.41 ஏக்கர் நிலம் தானம் தந்த ஆவணம் கண்டெடுப்பு
வடபழனி முருகன் கோவிலுக்கு 1.41 ஏக்கர் நிலம் தானம் தந்த ஆவணம் கண்டெடுப்பு
ADDED : டிச 11, 2025 05:33 AM

சென்னை:சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நிலதானம் அளித்த ஆவணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பக்தர்களிடம் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக, வடபழனி முருகன் கோவில் உள்ளது.
இக்கோவிலின் தல வரலாற்றின்படி, சாலிகிராமம் அண்ணாசாமி நாயக்கர், ரத்தினசாமி செட்டியார், பாக்கியலிங்க செங்குந்தர் ஆகிய மூவரும் தம்பிரான்களாக இருந்து, வடபழனி முருகன் கோவிலை நிர்வாகம் செய்துள்ளனர்.
இந்த மூவருக்கும், அங்கு சமாதிகள் உள்ளன. அதில், பாக்கியலிங்கத் தம்பிரான், தற்போதுள்ள கல் கட்டடத்தை நிறுவியுள்ளார்.
இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆலோசகராக பணியாற்றும் வெ.ராமமூர்த்தி, வடபழனி முருகன் கோவிலுக்கு நிலக்கொடை தந்த ஆவணம் ஒன்றைக் கண்டறிந்து, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு அனுப்பினார்.
பத்திரப்பதிவு செய்யப்பட்ட அந்த ஆவணத்தை படித்த அவர், இதுவரை வெளிவராத வரலாற்றுக் குறிப்பு ஆவணத்தில் இருப்பதை கண்டறிந்தார்.
இதுகுறித்து, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
சென்னை வடபழனி முருகன் கோவிலின் தான தர்மகர்த்தாவான பாக்கியநாத தம்பிரானிடம், விருகம்பாக்கத்தில் வாழ்ந்த வெங்கடநாயக்கர் குமாரர் பால நாயக்கர் என்பவர், 1.41 ஏக்கர் நஞ்சை நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
தர்மகர்த்தா பாக்கிய நாதனை, கோவிலின் தல வரலாறில், பாக்கியலிங்க தம்பிரான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தானம் செய்தவர் வன்னிய மரபினர், தர்மகர்த்தா செங்குந்த மரபினர், இருவரும் சிவ மதத்தினர். இவர்கள் விவசாயிகள்.
இந்த நிலதானம், 1893 ஜூன் 17ல், சைதாப்பேட்டை சப் - ரிஜிஸ்டர் அலுவலகத்தில், பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலம், 1892, ஆக., 17 ல் கிரயத்துக்கு வாங்கி, ஓராண்டு அனுபவித்து பின் தானமாக வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலத்தில், தர்மகர்த்தா விருப்பத்துக்கு ஏற்ப பயிர் செய்து கொள்ளலாம்; அதேவேளை அதை விற்கவோ, ஒத்திக்கு கொடுக்கவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏக்கருக்கு வரியாக, 5.20 ரூபாய் வசூலிக்கும் வகையில், 100 ரூபாய் மதிப்புள்ள நிலம் கொடையளிக்கப்பட்டு உள்ளது. இதன் வருவாயை, கோவில் துாப, தீப நைவேத்தியம் முதலான செலவுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தானமளித்த நிலத்தின் நான்கு எல்லையாக, துரைசாமி கிராமணியின் கிரய நிலம், மயானவெளி உள்ளிட்டவை காட்டப்பட்டு உள்ளன. இறுதியாக, சப் - ரிஜிஸ்டர் கையொப்பம் மற் றும் சாட்சிகளின் கையொப்பங்கள் உள்ளன.
சாட்சிகளில் ஒருவர் தெலுங்கிலும், இன்னொருவர் ஆங்கிலத்திலும் கையொப்பம் இட்டுள்ளனர். இதற்கான, 1 ரூபாய் பத்திரம் திருவல்லிக்கேணியில் வாங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

