/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர் வாட்டம் பார்க்காமல் கட்டிய வடிகால்வாய் மங்களம் நகரில் மழைநீருடன் கழிவு தேக்கம் பொதுமக்கள் சாலை மறியல்
/
நீர் வாட்டம் பார்க்காமல் கட்டிய வடிகால்வாய் மங்களம் நகரில் மழைநீருடன் கழிவு தேக்கம் பொதுமக்கள் சாலை மறியல்
நீர் வாட்டம் பார்க்காமல் கட்டிய வடிகால்வாய் மங்களம் நகரில் மழைநீருடன் கழிவு தேக்கம் பொதுமக்கள் சாலை மறியல்
நீர் வாட்டம் பார்க்காமல் கட்டிய வடிகால்வாய் மங்களம் நகரில் மழைநீருடன் கழிவு தேக்கம் பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : செப் 01, 2025 01:19 AM

ஆவடி:நீர் வாட்டம் ஆய்வு செய்யாமல் கால்வாய் கட்டப்பட்டதால் மழைநீர் செல்ல வழியின்றி ஆவடி அருகே கன்னடபாளையம் பகுதியில் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து மங்களம் நகரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆவடி கோவில்பதாகை பிரதான சாலை 3.5 கி.மீ., நீளம் உடையது. இங்கு, கலைஞர் நகர், பூம்பொழில் நகர், கன்னடபாளையம், மங்களம் நகர், டிரினிட்டி அவென்யூ, எம்.சி.பி நகர், கிருஷ்ணா அவென்யூ, கிறிஸ்து காலனி, செகரட்டரி காலனி உள்ளிட்ட 15 நகர்களில் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
மழை காலத்தில், மேற்கூறிய பகுதியில் வெள்ள பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு, 2023 - 24ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் 21.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலையின் இருபுறமும், 5,500 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. நீர் வாட்டம் முறையாக ஆய்வு செய்யாமல் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த கனமழையால், மழைநீர் வடிகாலில் தேங்கி நின்ற கழிவு நீர், மங்களம் நகர், டிரினிட்டி அவென்யூ, கிருஷ்ணா அவென்யூ, எம்.சி.பி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது .
இதனால் பகுதிவாசிகள் விரக்தியடைந்தனர். 100க்கும் மேற்பட்டோர் நேற்று 10:00 மணி முதல் 11:30 வரை கோவில்பதாகை பிரதான சாலையில், திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, பொதுமக்கள், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட பேச்சுக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க, கோவில் பதாகை பிரதான சாலையில் உள்ள பி.கே.மஹால் மற்றும் மங்களம் நகரில் உள்ள கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.