/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
44 கால்வாய்களில் துார்வாரும் பணி சென்னையில் இப்போதுதான் தீவிரம்
/
44 கால்வாய்களில் துார்வாரும் பணி சென்னையில் இப்போதுதான் தீவிரம்
44 கால்வாய்களில் துார்வாரும் பணி சென்னையில் இப்போதுதான் தீவிரம்
44 கால்வாய்களில் துார்வாரும் பணி சென்னையில் இப்போதுதான் தீவிரம்
ADDED : அக் 25, 2025 05:00 AM

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் 44 கால்வாய்களில் வெள்ள நீர் செல்வதற்கு ஏற்ப துார்வாரும் பணியை, மாநகராட்சி இப்போதுதான் துவங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னையில், 17ம் தேதி முதல் நேற்று காலை வரை, 19.78 செ.மீ., மழை பெய்துள்ளது. மழையால், 965 இடங்களில் தண்ணீர் தேங்கி, வெளியேற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி சார்பில், 1,132 கி.மீ., மழைநீர் வடிகால்வாய் துார்வாரியதாக கூறியுள்ள மாநகராட்சி, 44 கிளை கால்வாய்களில் துார்வாரும் பணியுடன், ஆகாயத்தாமரை அகற்றும் பணியை, இப்போது தான் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் முடிச்சூரில், வெளிவட்ட சாலை சந்திப்பில் இருந்து, அதை ஒட்டி அடையாறு ஆற்றை இணைக்கும் கால்வாய் செல்கிறது. முடிச்சூர் ஊராட்சி பகுதிகள், சீக்கனா ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், இதன் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்கிறது. புதர்மண்டி காணப்பட்ட இக்கால்வாயில், மழைநீர் தடையின்றி செல்ல, பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை, அமைச்சர்கள் நேரு, மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
பெரம்பூரில், மேயர் பிரியா அளித்த பேட்டி:
தீபாவளிக்கு பின் பெய்த 6 செ.மீ., மழைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் எவ்வாறு பணியில் ஈடுபட்டனரோ, அதேபோல் வரவிருக்கும் மழைக்கும் தயாராக உள்ளனர்.
ஒவ்வொரு வார்டிலும் சாலையில் உள்ள பள்ளங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, 2,000 பள்ளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற துறையினர், அவரவர் பணிகளை முடித்து மாநகராட்சிக்கு தடையின்மைச் சான்று வழங்கிய பின்னரே, தார்ச்சாலை முழுதாக போடப்படும். ஜனவரிக்கு மேல்தான் தார்சாலை போடப்படும்.
ஆனாலும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, தற்போது தற்காலிகமாக, 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

