/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்புகளால் புழலில் வெள்ள பாதிப்பு அம்பலம்! வருவாய் துறையை கைகாட்டும் 'நீர்வளம்'
/
ஆக்கிரமிப்புகளால் புழலில் வெள்ள பாதிப்பு அம்பலம்! வருவாய் துறையை கைகாட்டும் 'நீர்வளம்'
ஆக்கிரமிப்புகளால் புழலில் வெள்ள பாதிப்பு அம்பலம்! வருவாய் துறையை கைகாட்டும் 'நீர்வளம்'
ஆக்கிரமிப்புகளால் புழலில் வெள்ள பாதிப்பு அம்பலம்! வருவாய் துறையை கைகாட்டும் 'நீர்வளம்'
ADDED : அக் 21, 2024 11:43 PM

புழல் :புழல் ஒன்றிய ஊராட்சிகளில் மழை வெள்ளப் பாதிப்பிற்கு காரணம், வருவாய் துறையின் அலட்சியம் என்பது, நீர்வள ஆதாரத்துறையின் கடிதம் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை, செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சி, கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் மீரான், 36; சமூக ஆர்வலர். கடந்த ஜூன் மாதம், பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் நடந்த, மக்கள் குறைதீர் ஜமாபந்தியில், பொதுநலன் கருதி மனு ஒன்றை கொடுத்தார்.
அதில், 'ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போது, புழல் ஒன்றியத்தில், விளாங்காடுபாக்கம் ஊராட்சியை வெள்ளம் சூழ்வதால், வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பகுதிவாசிகள் பாதிக்கின்றனர்.
'அப்போது, அவர்களுக்கு உரிய உதவிகளும் கிடைப்பதில்லை. அதனால், பாதிப்பை தவிர்க்க, மழைநீர் வடிகால்களை துார்வாரி, அதில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அவற்றை வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
கடிதம்
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டம் நீர்வள ஆதாரத்துறையின் கொற்றலையாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர், செல்வம் மீரானுக்கு, கடந்த ஜூலை மாதம் பதில் கடிதம் அனுப்பிஉள்ளார்.
அதில், 'நீர் வழித்தட ஆக்கிரமிப்பு விபரங்கள் குறித்து, பொன்னேரி தாலுகா வருவாய் துறையிடம் கேட்கப்பட்டுள்ளது. விபரம் கிடைத்ததும், அரசின் உரிய வழிகாட்டுதல்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இம்மாதம் 15ம் தேதி வரை, இரு துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சமீபத்தில் பெய்த கனமழையில், தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம் ஊராட்சி பகுதிகள், மழை வெள்ளத்தில் மூழ்கின.
குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. சில இடங்களில், ஐந்து நாட்கள் தண்ணீர் வடியாததால், பலரும் அவதியடைந்தனர்.
அதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்ட அப்பகுதியினர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர். தவிர, நம் நாளிதழிலும் விரிவான செய்தி வெளியானது.
அதன் பின், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் வருவாய் துறையினர், மேற்கண்ட ஊராட்சிகளில், நேரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது, தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி, குமரன் நகர், பள்ளிக்குப்பம் பகுதிகள் வழியாக, விளாங்காடுபாக்கம் செல்லும் ஐந்து மழைநீர் வடிகால் இணைப்புகள், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்பால் தண்ணீர் செல்ல வழியின்றி, வீடுகளை சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தியதும் தெரிந்தது.
இதையடுத்து கலெக்டர், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, மூன்று நாட்களாக தொடர்கிறது.
அலட்சியம்
மழை வெள்ள பாதிப்பை தவிர்க்க, நான்கு மாதங்களுக்கு முன்பே, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தும், ஆக்கிரமிப்பு விபரங்களை, பொன்னேரி வருவாய் துறையினர் வழங்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
அதனாலே, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது, நீர்வளத் துறையின் கடிதம் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
தீர்த்தகிரையம்பட்டு, குமரன் நகர் முதல், விளாங்காடுபாக்கம் வழியாக, சென்றம்பாக்கம் ஊராட்சி ஏரி வரை, மழைநீர் கால்வாய்களை துார்வார வேண்டும்.
தவிர, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். அப்போதுதான், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொன்னேரி வருவாய் அலுவலர் ஒருவர் கூறுகையில், கால்வாய் ஆக்கிரமிப்பில் இருந்த ஐந்து கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து கால்வாயில் தண்ணீர் செல்லும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.
முழுதும்
அகற்றணும்!
நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்தாலோ, துணை போனாலோ சம்பந்தப்பட்டோர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கு ஒன்றில், நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. அதை சரியாக கடைபிடித்தால் நீர்வழித்தடங்கள் பாதுக்காக்கப்படும். விளாங்காடுபாக்கம் சுற்று வட்டாரத்தில், ஐந்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இவற்றில் ஒரு கால்வாயில் தான், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. அதாவது 5 கி.மீ., தொலைவுக்கு உள்ள கால்வாயில் தற்போது, 1.5 கி.மீ., தொலைவுக்கே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இதை முழுதுமாக அகற்ற வேண்டும்.
- செல்வம்மீரான், 36, சமூக ஆர்வலர்