/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புறவழிச்சாலையுடன் இணைப்பு இல்லாததால்... பரிதவிப்பு!:தினம் 8 கி.மீ., சுற்றி அம்பத்துார் மக்கள் அவதி
/
புறவழிச்சாலையுடன் இணைப்பு இல்லாததால்... பரிதவிப்பு!:தினம் 8 கி.மீ., சுற்றி அம்பத்துார் மக்கள் அவதி
புறவழிச்சாலையுடன் இணைப்பு இல்லாததால்... பரிதவிப்பு!:தினம் 8 கி.மீ., சுற்றி அம்பத்துார் மக்கள் அவதி
புறவழிச்சாலையுடன் இணைப்பு இல்லாததால்... பரிதவிப்பு!:தினம் 8 கி.மீ., சுற்றி அம்பத்துார் மக்கள் அவதி
UPDATED : டிச 24, 2025 05:08 AM
ADDED : டிச 24, 2025 05:06 AM

அம்பத்துார்: சென்னை பெருங்களத்துார் - புழல் புறவழிச்சாலையை, அம்பத்துார், கள்ளிக்குப்பம் அருகே உள்ள அணுகு சாலையுடன் இணைத்தால், சுற்றுவட்டார மக்கள் மிகவும் பயனடைவர். தினம் 8 கி.மீ., சுற்றிச் செல்வது தடுக்கப்படுவதுடன், அடிக்கடி நடக்கும் விபத்துகளையும் தவிர்க்கலாம். தவிர, அம்பத்துார் தொழிற்பேட்டைக்கு சரக்கு வாகனங்கள் வந்து செல்வதிலும் சிக்கல் இருக்காது என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். சென்னை புறவழிச்சாலையான பெருங்களத்துார் - புழல் சாலை, 2010ல் பயன்பாட்டிற்கு வந்தது. மொத்தம் 32 கி.மீ., நீளமுடைய இந்த சாலையில், போரூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.
![]() |
இதில் போரூர் சுங்கச்சாவடி, மதுரவாயல், அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்செஞ்ச் பகுதிகளில், புறவழிச்சாலையில் இருந்து உட்புற பகுதிகளுக்கு செல்லும் வகையில் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அப்பகுதி வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருகின்றனர்.
அதேபோல், பட்டரைவாக்கம், பால்பண்ணை சாலை அருகே, புழல் மார்க்கத்தில் செல்லவும், பெருங்களத்துார் மார்க்கத்தில் இருந்து வெளியேறவும் வழி உள்ளது.
ஆனால், புறவழிச்சாலையில் முக்கிய பகுதியாக விளங்கும் மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், புதுார் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், தங்கள் பகுதியில் இருந்து புறவழிச்சாலையில் பயணத்தை மேற்கொள்ள, இணைப்பு அமைக்கப்படவில்லை.
இதனால் அவர்கள், அம்பத்துார் ஓ.டி., அல்லது கருக்கு பிரதான சாலை வழியாக, 8 கி.மீ., கடந்து, அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்செஞ்ச் பகுதிக்கும், சூரப்பட்டு அல்லது அணுகு சாலை வழியாக 7 கி.மீ., கடந்து, புழல் பகுதிக்கும் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
ஏற்கனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அதேபோல் இதையொட்டிய சி.டி.எச்., சாலை விரிவாக்க பணியும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு - திருநின்றவூர் வரை அம்பத்துார் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டம் உள்ளது.
அவ்வாறு மெட்ரோ ரயில் பணிகள் துவங்கினால், அப்பகுதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். அதாவது, சி.டி.எச்., சாலை மற்றும் கருக்கு பிரதான சாலை வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று போக்குவரத்து பாதிக்கப்படும். இதே நிலைதான் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையிலும் ஏற்படும்; முக்கிய சாலையில் பல கி.மீ.,க்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றால் பல்வேறு பாதிப்புகள் நிகழும்.
இதை கருத்தில் கொண்டு, கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள அணுகு சாலையுடன், சென்னை புறவழிச்சாலையின் இரண்டு மார்க்கத்திலும் இணைப்பு ஏற்படுத்தினால், அப்பகுதி வாகன ஓட்டிகள் பெரிதும் பயனடைவர். அவர்களின் பயண நேரம், எரிப்பொருள் பயன்பாடு குறையும்.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், சி.டி.எச்., சாலை விரிவாக்கம் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளின்போது, சீரான போக்குவரத்துக்கும் வழிவகுக்கும் என, அம்பத்துார் பகுதியில் உள்ள, குடியிருப்பு சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
அம்பத்துார், கள்ளிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிப்போர், சென்னை புறவழிச்சாலையை பயன்படுத்த, 8 கி.மீ., பயணித்து, அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்செஞ்ச் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. கள்ளிகுப்பத்தில் உள்ள அணுகு சாலையை, சென்னை புறவழிச்சாலையுடன் இணைத்தால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவர். சி.டி.எச்., சாலை மற்றும் கருக்கு பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசலும் குறையும்.
- எம்.ரங்கநாதன், 64, சமூக ஆர்வலர், கொரட்டூர்
விபத்து ஏற்படுவது குறையும்
பெருங்களத்துார் - புழல் புறவழிச்சாலையுடன் கள்ளிக்குப்பம் பகுதிக்கு இணைப்பு சாலை ஏற்படுத்தினால், அதிகம் பயனடையும் அம்பத்துார் தொழிற்பேட்டை நிர்வாகத்தினர், இது சம்பந்தமாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலுவிடம் மனு அளித்துள்ளனர். அதில், 'அம்பத்துார் தொழிற்பேட்டையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, அம்பத்துார், கள்ளிக்குப்பம் பகுதியில் அணுகு சாலையுடன் சென்னை புறவழிச்சாலையை இணைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால், அதிக விபத்து நடைபெறும் பகுதியாக கருதப்படும் டெலிபோன் எக்ஸ்செஞ்ச் சாலையில் விபத்துக்கள் குறையும்' என குறிப்பிட்டுள்ளனர்.


