/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விருகம்பாக்கத்தில் வக்ப் வாரிய குளத்தை துார்ப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி வெள்ளம் சூழும் அபாயம்
/
விருகம்பாக்கத்தில் வக்ப் வாரிய குளத்தை துார்ப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி வெள்ளம் சூழும் அபாயம்
விருகம்பாக்கத்தில் வக்ப் வாரிய குளத்தை துார்ப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி வெள்ளம் சூழும் அபாயம்
விருகம்பாக்கத்தில் வக்ப் வாரிய குளத்தை துார்ப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி வெள்ளம் சூழும் அபாயம்
ADDED : அக் 08, 2025 02:25 AM

விருகம்பாக்கம், விருகம்பாக்கத்தில் உள்ள வக்ப் வாரியத்திற்கு சொந்தமான குளத்தை மண் கொட்டி துார்ப்பதால், சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
விருகம்பாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவில், 3 ஏக்கர் பரப்பில் குளம் உள்ளது. குளமும், அதைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளும், தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு சொந்தமானவை.
கடந்த 2021, ஏப்ரல் மாதம், இதே இடத்தில், 1,200 சதுர அடியில் மதரசா பள்ளி அமைக்க, வக்ப் வாரியம் அனுமதி அளித்தது.
குளத்தை ஒட்டி, சாலையோர நீர்ப்பிடிப்பு பகுதியில் இடம் ஒதுக்கிய நிலையில், அதனுடன் சேர்த்து குளத்தில் மண் கொட்டி துார்க்கும் முயற்சி நடந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் 2022, ஆக., மாதம் செய்தி வெளியானதை அடுத்து, அப்பணி நிறுத்தப்பட்டது. 2024ம் ஆண்டு மீண்டும் முயற்சி செய்யப்பட்டது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் கொட்டியதோடு, குளத்தை சமன்படுத்தும் வேலை, தற்போது நடந்து வருகிறது.
சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள குளத்தை ஆக்கிரமிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என, அப்பகுதிமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்பகுதிமக்கள் கூறியதாவது:
ஒவ்வொரு மழைக்காலத்திலும் வேம்புலியம்மன் கோவில் தெருவில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும். அதை தடுக்க, இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாய், வக்ப் வாரியத்திற்கு சொந்தமான குளத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், குளத்தில் மண் கொட்டி துார்த்தால், அங்கு செல்ல வேண்டிய மழைநீர், குடியிருப்புகளை சூழ்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படும்; மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை உண்டாகும். எனவே, குளத்தை துார்க்கும் முயற்சியை வக்ப் வாரியம் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.