/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாய் அமைக்காததால் கடலில் விடப்படும் கழிவுநீர் தண்ணீர் வடிய வழியில்லாததால் பெருங்குடியில் அவஸ்தை
/
கால்வாய் அமைக்காததால் கடலில் விடப்படும் கழிவுநீர் தண்ணீர் வடிய வழியில்லாததால் பெருங்குடியில் அவஸ்தை
கால்வாய் அமைக்காததால் கடலில் விடப்படும் கழிவுநீர் தண்ணீர் வடிய வழியில்லாததால் பெருங்குடியில் அவஸ்தை
கால்வாய் அமைக்காததால் கடலில் விடப்படும் கழிவுநீர் தண்ணீர் வடிய வழியில்லாததால் பெருங்குடியில் அவஸ்தை
ADDED : நவ 21, 2024 12:20 AM

கொட்டிவாக்கம்,கொட்டிவாக்கம், காந்தி தெருவில், கழிவுநீர், மழைநீர் வெளியேற வழி இல்லாததால், ஆண்டு முழுதும் பகுதி மக்கள் கடும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். தவிர, கடலில் கலக்கும் கழிவுநீரால், கடல் வளம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
பெருங்குடி மண்டலம், வார்டு 181க்கு உட்பட்டது கொட்டிவாக்கம். இங்கு, கடற்கரை அருகே ஏ.ஜி.எஸ்., காலனி அடுத்த காந்தி தெருவில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
குடிநீர் இல்லை
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கொட்டிவாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதில், ஏ.ஜி.எஸ்., காலனியில் பல வீடுகளும், காந்தி தெருவில் அனைத்து வீடுகளும் விடுபட்டன. அதுபோல், குடிநீர் இணைப்பும் இதுவரை வழங்கப்படவில்லை.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்கு மாநகராட்சியால் வரி வசூலிக்கப்படுகிறது.
தவிர, 300க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், காந்தி தெருவில் உள்ள தனியார் நிலத்தில் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
அதிகாரிகளிடம், ஆட்சியாளர்களிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என, பகுதிவாசிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
பகுதிவாசிகள் கூறியதாவது:
ஏ.ஜி.எஸ்., காலனி மற்றும் காந்தி தெருவில், ஒரு பகுதிக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா இல்லை. இதனால், முறையான வடிகால் வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, வீடுகள் தோறும் குழாய்கள் பொருத்தப்பட்டு, வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இணைப்பு இன்னமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஏ.ஜி.எஸ்., காலனி மற்றும் காந்தி தெரு பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுநீர் மற்றும் கழிப்பறை நீர் மட்டும் வெளியேறும் வகையில், அ.தி.மு.க., ஆட்சியில், 12 செ.மீ., விட்டம் உடைய குழாய் 500 மீ., துாரத்திற்கு பொருத்தப்பட்டு, அந்த கழிவுநீர், கடலில் கலக்கும்படி கால்வாய் அமைக்கப்பட்டது.
பெரும் ஆபத்து
ஆனால், குடிநீர் வாரியத்தின் அனுமதியின்றி, ஆட்சியாளர்களின் விருப்பத்தில் அமைக்கப்பட்டதால், முறையான திட்டமிடல் இல்லை.
இதனால், காந்தி தெரு இறுதியில் உள்ள மேடான பகுதியில், கழிவுநீர் வெளியேற வழியின்றி, மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பியது.
இதையடுத்து, காந்தி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான நான்கு கிரவுண்ட் இடத்தில் கழிவுநீர் தேங்கும் வகையில் பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த இடத்தில் தேங்கும் கழிவுநீரை, தினமும் மாலை, ஒரு மணி நேரம் மோட்டார் வைத்து வெளியேற்ற, மாநகராட்சியே ஊழியரை நியமித்தது.
தனியார் இடத்தில் கழிவுநீர் தேங்காமல், ஒரு கால்வாய் அமைக்கும்படி பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், 20 அடி அகலமுள்ள தெரு, ஆக்கிரமிப்பு காரணமாக 5 அடியாக சுருங்கி, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்தப் பணியை நிறைவேற்ற முடியவில்லை.
தவிர, கடற்கரை பகுதியில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இதனால், அத்தனை வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர், கடலில் தான் கலக்கிறது.
ஒட்டு மொத்தமாக, கொட்டிவாக்கம், பாலவாக்கம் கடற்கரை அருகே உள்ள 10,000க்கும் மேற்பட்ட வீடுகளின் கழிவுநீர் கடலில் கலக்கும் வகையில், அரசே கால்வாய் அமைத்துள்ளது, கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
எனவே, இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர், முறையாக சுத்திகரிப்பு செய்யப்படுவதற்கு தேவையான முன்னெடுப்புகளை அரசு துவங்க வேண்டும்.
தவிர, கழிவுநீர் கால்வாய், பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பை பாகுபாடு இன்றி அனைத்து தெருக்களுக்கும் செய்து தர வேண்டும்.
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை அகற்றி, வாகன போக்குவரத்தை எளிமையாக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.