/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் கால்வாய் இல்லாததால் மாடம்பாக்கத்தை சூழும் வெள்ளம்
/
மழைநீர் கால்வாய் இல்லாததால் மாடம்பாக்கத்தை சூழும் வெள்ளம்
மழைநீர் கால்வாய் இல்லாததால் மாடம்பாக்கத்தை சூழும் வெள்ளம்
மழைநீர் கால்வாய் இல்லாததால் மாடம்பாக்கத்தை சூழும் வெள்ளம்
ADDED : செப் 24, 2024 01:06 AM
மாடம்பாக்கம்,
தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலம், மாடம்பாக்கம், 67, 68வது வார்டுகளில், பத்மா நகர், பிருந்தாவன் நகர், புவனேஸ்வரி நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், உண்ணாமலை நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், 600 குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி, பேரூராட்சியாக இருந்து, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவை. அதனால், முறையான மழைநீர் கால்வாய் இல்லை.
பேரூராட்சியாக இருந்தபோது அமைக்கப்பட்ட 1 அடி அகலம், 1 அடி ஆழம் உடைய கால்வாய் மட்டுமே உள்ளது. அதுவும், அனைத்து தெருக்களிலும் இல்லை.
இதனால், ஒவ்வொரு மழையின்போதும், தண்ணீர் வடிய வழியில்லாததால், இப்பகுதிகளில் 3 அடி முதல் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்குகிறது. மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்குகின்றனர்.
அப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சிறிய கால்வாய்களில் குளம் போல் தேங்கி உள்ளது.
இதனால், கொசு தொல்லையும், துார்நாற்றமும் அதிகரித்து, தொற்று நோய் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட இப்பகுதிகளில், மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என, அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், மாநகராட்சி நிர்வாகமும், 5வது மண்டல அதிகாரிகளும் கண்டு கொள்வதே இல்லை. இந்தாண்டு மழையிலும், இப்பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, மாடம்பாக்கத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.