/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி தொழில் உரிமம் எளிதாக புதுப்பிக்க வசதி
/
மாநகராட்சி தொழில் உரிமம் எளிதாக புதுப்பிக்க வசதி
ADDED : மார் 24, 2025 01:55 AM
சென்னை:சென்னை மாநகராட்சியில், 67,000 கடைகள், மாநகராட்சியின் தொழில் உரிமம் பெற்று இயங்குகின்றன. இந்த தொழில் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க, கடைகளின் தன்மைக்கு ஏற்ப, 500 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, உரிமத்தை புதுப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. அதற்கேற்ப கட்டணமும் உயர்ந்தது.
வியாபாரம் சரியாக இல்லாவிட்டால், சிறு, குறு கடைகளை சில மாதங்களில் கூட வியாபாரிகள் மூடிவிடுவர் என்பதால், மூன்று ஆண்டுக்கு உரிமம் பெற தயங்கினர். மீண்டும் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வசதி வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
வியாபாரிகள் அதற்கு ஏற்ப, ஒன்று, இரண்டு, மூன்று ஆண்டுகள் என, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உரிமதை்த புதுப்பித்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.
இதற்கான உத்தரவு, 15 மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
புதிய நடைமுறைபடி, வணிகர்கள் சென்னை மாநகராட்சியின், chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என, தொழில் உரிமத்தை புதுப்பித்து கொள்ளலாம்.
சேவை மையங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் உரிமம் ஆய்வாளர் வைத்துள்ள கையடக்க கருவி வாயிலாக, வரும் 31ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.