ADDED : மார் 20, 2024 12:13 AM
சோழிங்கநல்லுார், தமிழகத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட சட்டசபை தொகுதியாக, சோழிங்கநல்லுார் உள்ளது. இங்கு, 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தொகுதிக்கான, தேர்தல் அலுவலகம், சோழிங்கநல்லுார், நெடுஞ்செழியன் தெருவில் உள்ளது.
இங்கு, ஆறு கணினிகள், வாக்காளர் தொடர்பான ஆவணங்களுடன், 20 ஊழியர்கள் பணி புரிகின்றனர். இந்த அலுவலகத்தில் ஆஸ்பட்டாஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அதில் இருந்து வெப்பம் தாக்காமல் இருக்க, தெர்மாகோல் போடப்பட்டது. சேதமடைந்த தெர்மாகோலை மாற்றி, புதிதாக அமைக்காததால், நேரடியாக வெப்பம் தாக்கியது.
இதனால், காலை முதல் இரவு வரை பணி புரியும் ஊழியர்கள் வெப்பத்தில் சிரமப்பட்டனர். இது குறித்து, நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் மேற்கூரை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனால், தேர்தல் பணி புரியும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

