/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரிவாக்கப்பட்ட 6 தொகுதிக்கு சென்னையில் தேர்தல் பணி
/
விரிவாக்கப்பட்ட 6 தொகுதிக்கு சென்னையில் தேர்தல் பணி
விரிவாக்கப்பட்ட 6 தொகுதிக்கு சென்னையில் தேர்தல் பணி
விரிவாக்கப்பட்ட 6 தொகுதிக்கு சென்னையில் தேர்தல் பணி
ADDED : ஜன 23, 2025 11:58 PM
சென்னை, சென்னை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது சோழிங்கநல்லுார், ஆலந்துார், மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள், சென்னையுடன் சேர்க்கப்பட்டன.
அதன் அடிப்படையில், மாநகராட்சி எல்லை பகுதிகள், சென்னை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சேர்ந்தன.
மீதமுள்ள பகுதிகள், அந்தந்த புறநகர் மாவட்டத்தில் உள்ளன.
தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், 75 சதவீத பகுதிகள், சென்னை மாநகராட்சியில் உள்ள, 20 வார்டுகளின் எல்லையில் உள்ளன. மீதமுள்ள, 25 சதவீத பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஏழு ஊராட்சிகளின் எல்லையில் உள்ளன.
இதேபோன்று, இதர சட்டசபை தொகுதிகளிலும் உள்ளன. இதில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களின் கீழ் வருகின்றன.
சட்டசபை, லோக்சபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் போன்ற இதர பணிகள், சென்னை மாநகராட்சி, மண்டல உதவி கமிஷனர் மற்றும் வட்டார துணை கமிஷனரின் கீழ் வருகின்றன.
இதனால், ஓட்டுச்சாவடிகள் பிரிப்பது, ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஊழியர்கள் நியமனம் குறித்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகத்தில் கலந்தாலோசிக்க வேண்டி இருந்ததால், நிர்வாக சிக்கல் நீடித்தது.
மேலும், பாதுகாப்பு பணிகளிலும் குளறுபடி ஏற்பட்டது.
இதனால் சோழிங்கநல்லுார், ஆலந்துார், மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் முழுதையும், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் பணிக்கு, சென்னை மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான நடவடிக்கையை, நான்கு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

