/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார 'ஏசி' பேருந்துகள் துணை முதல்வர் இன்று துவக்கம்
/
மின்சார 'ஏசி' பேருந்துகள் துணை முதல்வர் இன்று துவக்கம்
மின்சார 'ஏசி' பேருந்துகள் துணை முதல்வர் இன்று துவக்கம்
மின்சார 'ஏசி' பேருந்துகள் துணை முதல்வர் இன்று துவக்கம்
ADDED : ஆக 11, 2025 01:26 AM
சென்னை:தமிழகத்தில் முதல் முறையாக, மின்சார 'ஏசி' பேருந்துகளை, துணை முதல்வர் உதயநிதி, இன்று துவக்கி வைக்க உள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 208 கோடி ரூபாய் மதிப்பில், 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் துவக்கி வைத்தார்.
பேருந்துகளுக்கு 'சார்ஜ்' எனும் மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமானப் பணிகள், பராமரிப்பு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன், 47.50 கோடி ரூபாயில், மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பெரும்பாக்கம் மின்சார பேருந்து பணிமனையை, பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், அதிகாரிகளுடன் கடந்த 6ம் தேதி பணிமனையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆக., 11ம் தேதி முதல் மின்சார 'ஏசி' பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 49.56 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பெரும்பாக்கம் பணிமனையை, துணை முதல்வர் உதயநிதி, இன்று திறந்து வைக்கிறார்.
இரண்டாம் கட்டமாக 233 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட, 55 மின்சார 'ஏசி' பேருந்துகளையும், 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளையும், துணை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், போக்குவரத்துத் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.