ADDED : செப் 10, 2026 05:02 PM

வேளச்சேரி: வேளச்சேரியில், உயிர்களை காவு வாங்கும் வகையில் உள்ள மின் வடத்தை, மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, நேரு நகர், திருவள்ளுவர் தெருவில் கழிவு நீர் குழாயில் அடைப்பு காரணமாக ஒரு மாதமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி தேங்கி வருகிறது.
இந்த தெருவில், புதை மின் வடம் முறையாக பதிக்கப்படாமல் உள்ளது. அதில், வாகனங்கள் ஏறி இறங்குவதால், கேபிள் சேதமடைந்தது. இருந்தும், அதை பூமிக்குள் பதிக்காமல், மேல் பகுதியில் வைத்து ஒட்டு போடப்பட்டுள்ளது. அதில் மின்கசிவு இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், கழிவுநீரும் மின் வடம் உள்ள பகுதியில் தேங்குகிறது. இதனால், மின்சாரம் பாய்ந்து உயிர்களை காவு வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பகுதிமக்கள் கூறுகையில், ‘குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் வரும்போதும் கூறிவிட்டோம். உயிர் சேதம் ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பார்களா என தெரியவில்லை. ஆபத்தை உணர்ந்து, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
