ADDED : செப் 10, 2026 05:02 PM
சென்னை: சென்னை போலீசில், போக்குவரத்து வடக்கு, நுண்ணறிவு பிரிவு, கிழக்கு மண்டல இணை கமிஷனர்கள் நியமிக்கப்படாததால், பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை போலீசில், கிழக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்த பண்டி கங்காதர், தமிழக அரசின் காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனராக பணிபுரிந்த தர்மராஜன், முதல்வர் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். போக்குவரத்து வடக்கு இணை கமிஷனராக பணிபுரிந்த திஷா மிட்டல், சட்டம் --– ஒழுங்கு மேற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டார். இவர்கள், ஏற்கனவே பணிபுரிந்த இடங்கள் காலியாகவே உள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பணியிட மாற்றம் செய்யப்பட்ட இணை கமிஷனர்களின் பணிகள், மற்ற அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் பணி என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, அவர்கள் வழக்கமாக பணிபுரியும் இடங்களுக்கே சென்று, கோப்புகளில் கையெழுத்து பெற வேண்டி உள்ளது.
அன்றாடம் முடிவெடுக்க வேண்டிய பணிகள் கூட முடங்கி கிடக்கின்றன. இதனால், காலியாக உள்ள இணை கமிஷனர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள கூறினர்.
