ADDED : பிப் 15, 2024 12:42 AM
மயிலாப்பூர்,
நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, 50 வீடுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 'மிக்ஜாம்' புயலால், ஆங்காங்கே மின் பிரச்னை எழுந்தது. இதில் மயிலாப்பூர், வீரபெருமாள் கோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, பங்காரம்மன் கோவில் தெரு, சிதம்பர சாமி தெரு ஆகிய பகுதிகளில், பூமிக்குள் புதைக்கப்பட்ட மின்வடங்கள் சேதம்அடைந்தன.
புயலுக்குப் பின், கடந்த டிசம்பர் மாதம், சில வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு முறையாக வழங்கப்பட்டது. மற்ற வீடுகளுக்கு, மின் மாற்றியில் இருந்து ஒயர் எடுக்கப்பட்டு, தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மின் ஒயர்கள் வெளியில் தெரியும்படி இருந்ததால், மின்கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து, கடந்த 12ம் தேதியன்று, நம் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், முதற்கட்டமாக 50 வீடுகளுக்கு தற்காலிக இணைப்பை அகற்றி, மீண்டும் நிரந்தர மின் இணைப்பு கொடுத்து உள்ளனர்.

