/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்னணு சாதன கிடங்கு தீக்கிரை; பல கோடி இழப்பு
/
மின்னணு சாதன கிடங்கு தீக்கிரை; பல கோடி இழப்பு
ADDED : ஜன 14, 2024 12:40 AM

புழல்,புழல், அம்பத்துார் சாலையில், சீ ஷெல்டர் வேர்ஹவுஸ் பி.லி., என்ற பெயரில் 80,000 சதுர அடியில் கிடங்கு இயங்கி வருகிறது. நங்கநல்லுாரைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன், 50, என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இங்கு, மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிஜ் உள்ளிட்ட, வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இங்கு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இரவில் 10 பேர் பணியில் இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் எலக்ட்ரானிக் பொருட்கள், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் அதிகமாக இருந்ததால், கொழுந்துவிட்டு எரிந்தது.
செங்குன்றம், மணலி, வியாசர்பாடி, மாதவரம், கொளத்துார், வில்லிவாக்கம், பிராட்வே ஆகிய இடங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஐந்து மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின. ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தீ விபத்தின் போது, ரசாயன கலவை நிரப்பப்பட்ட ஏழு டேங்கர்கள் வெளியே இறக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் தீ பரவாமல் இருக்க, தீயணைப்பு வீரர்கள் அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, 'கிரேன்' வாயிலாக அப்புறப்படுத்தினர்.
அவை வெடித்திருந்தால், சுற்றுவட்டாரத்தில் 200 மீட்டருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

