/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிதாக 13 மணல் குவாரிகள் காஞ்சிபுரத்திலும் எதிர்பார்ப்பு
/
புதிதாக 13 மணல் குவாரிகள் காஞ்சிபுரத்திலும் எதிர்பார்ப்பு
புதிதாக 13 மணல் குவாரிகள் காஞ்சிபுரத்திலும் எதிர்பார்ப்பு
புதிதாக 13 மணல் குவாரிகள் காஞ்சிபுரத்திலும் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 29, 2025 12:38 AM
காஞ்சிபுரம்,
தமிழகத்தில் புதிதாக, 13 மாவட்டங்களில் மணல் குவாரிகளை திறக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் குவாரி திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வடமாவட்டங்கள், வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கிய மணல் குவாரிகளையே பெரிதும் நம்பியுள்ளன.
கடந்த 2023ல் நடந்த அமலாக்கத் துறையினரின் திடீர் ரெய்டு காரணமாக, வேலுார், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டன.
இதனால், கட்டுமானத்திற்கு தேவையான மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், எம் - சாண்ட் மணலையே நம்ப வேண்டியுள்ளது. இவற்றின் விலையையும், ஒரு யூனிட் 3,500 - 4,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது; மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மணல் தட்டுப்பாட்டை போக்க, திருவள்ளூர், வேலுார், விழுப்புரம், திருச்சி, அரியலுார், புதுக்கோட்டை, கரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாமக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், கடலுார் ஆகிய, 13 மாவட்டங்களில், இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வழக்கு மற்றும் சர்ச்சையில் சிக்காத ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, குவாரி இயக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2013ல் நடந்த மணல் குவாரி முறைகேடு தொடர்பாக, அப்போதைய கலெக்டர் சித்திரசேனன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதோடு, 12 ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் குவாரி திறக்கப்படவே இல்லை.
புதிய மணல் குவாரிகள் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம் இடம்பெற வேண்டும்; கட்டுமானத்திற்கு தேவையான மணலை, சரியான விலையில் அரசு வழங்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி, வீடு கட்டுவோரும் வலியுறுத்தி வருகின்றனர்.