/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் மூடிய கேன்டீனை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
/
ஏர்போர்ட்டில் மூடிய கேன்டீனை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
ஏர்போர்ட்டில் மூடிய கேன்டீனை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
ஏர்போர்ட்டில் மூடிய கேன்டீனை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 10, 2025 12:23 AM
சென்னை :சென்னை விமான நிலையத்தில் இயங்கி வந்த ஊழியர் நல கேன்டீனை, மீண்டும் திறக்க வேண்டும் என, பயணியரிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், ஏ.ஏ.ஐ., ஊழியர் நல கேன்டீன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மாநில போலீஸ், விமான நிலைய அதிகாரிகள், சுங்கத்துறை, குடியுரிமை அதிகாரிகளுக்கு சலுகை விலையில் உணவு வழங்கப்பட்டது. அதேபோல், கால்டாக்சி ஓட்டுநர்கள், பயணியருக்கும் குறைந்த விலையில் தரப்பட்டது.
டீ, காபி, உணவுகளை குறைந்தது 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கும் விமான நிலைய முனையங்களில் செயல்படும் கடைகளைவிட, இந்த கேன்டீனில் மிகவும் குறைவு.
விமான நிலையம் வரும் பயணியர் மற்றும் உறவினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்த இந்த கேன்டீன், 'டெண்டர்' முடிந்ததாக கூறி, கடந்த பிப்., மாதம் இழுத்து மூடப்பட்டது. தற்போது வரை மூடியே இருப்பதால், புதிதாக 'டெண்டர்' விட்டு, கேன்டீனை மீண்டும் திறக்க, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, விமான பயணியர் கூறியதாவது:
விமான நிலைய முனையங்களில் திருப்தியாக சாப்பிடுவதற்கு குறைந்தது 500 ரூபாயாவது செலவிட வேண்டும். மத்திய அரசின் குறைந்த விலை உணவகமான 'உடான் யாத்ரி கபே'வும், புறப்பாடு முனையத்தில் மட்டுமே உள்ளது.
குறைந்த விலையில் சாப்பிடும் அளவிற்கு, விமான நிலைய வளாகத்தில் எந்த கடைகளும் இல்லை. முன்பு இருந்த கேன்டீன், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதுவும் 24 மணி நேரமும் இயங்கியதால் நிம்மதியாக இருந்தது.
தற்போது, விமான நிலையத்திற்கு வெளியே சென்றால் மட்டுமே குறைந்த விலையில் உணவு சாப்பிட முடிகிறது. அதனால், 'டெண்டர்' விட்டு, கேன்டீனை மீண்டும் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.