sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை உச்சகட்ட உஷார்! அச்சுறுத்தும் விளம்பர பதாகைகள் அகற்றம்

/

புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை உச்சகட்ட உஷார்! அச்சுறுத்தும் விளம்பர பதாகைகள் அகற்றம்

புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை உச்சகட்ட உஷார்! அச்சுறுத்தும் விளம்பர பதாகைகள் அகற்றம்

புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை உச்சகட்ட உஷார்! அச்சுறுத்தும் விளம்பர பதாகைகள் அகற்றம்


ADDED : நவ 30, 2024 12:04 AM

Google News

ADDED : நவ 30, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று கரையை கடக்க உள்ள புயல், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர். அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் விளம்பர பதாகைகள், கடைகளின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னையின் பிரதான சாலைகளான ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடப்பட்டு உள்ளன. பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகள் மூடப்பட்டு, பொதுமக்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மிதமான தொடர் மழை பெய்து வருகிறது. இன்று, 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், 20 செ.மீ.,க்கும் அதிகமாக கன மழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

புயல், மழை பாதிப்புகளை தடுக்க, பல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, பலத்த காற்று வீசும் என்பதால், சென்னை முழுதும் உயிர்பலி கேட்டு அச்சுறுத்தி வரும் விளம்பர பதாகைகள், அதை தாங்கும் சட்டகம், கடைகளின் பெயர் பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

அதன்படி, அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விளம்பர பதாகைகளை, நேற்று காலை முதல் ரோந்து பணிக்கு செல்லும் அந்தந்த பகுதி போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சென்னையின் பிரதான சாலையான, அண்ணா சாலை பாரத் பெட்ரோல் பங்க் அருகே உள்ள கார் உதிரி பாகங்கள் விற்பனை கடையின் பெயர் பலகை, பலத்த காற்று வீசியதால் ஊசலாடிக் கொண்டிருந்தது.

விபத்து அபாயத்தை கருதி அதை போலீசார் அகற்றினர். இதுபோல், அச்சுறுத்தலாக உள்ள விளம்பர பதாகைகள் அனைத்தையும் அகற்றும் பணி சென்னை முழுதும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

மழை பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மண்டல அதிகாரிகள்,  மீட்பு பணிக்கான உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். மழைநீரை வடியவைக்க மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை, அந்தந்த பகுதிகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மழை பாதிப்பு சம்பந்தமாக உடனுக்குடன் அறியும் வகையில், வேளச்சேரி, மடிப்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர், மாதவரம், புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் மினி கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் தங்குவதற்கான நிவாரண முகாம்களில், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டது.

'புயல், அதிக கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

சென்னைக்கு மழை இருக்கும் என அறிவித்துள்ளனர். புயல், கனமழை வந்தாலும், அதை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.

கடந்த அக்., மாதமே, 100 குதிரை திறன் உடைய 110 மோட்டார்கள் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது தாழ்வான பகுதிகளில் கூடுதலாக, 60 மோட்டார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் கூடுதலாக கவனித்து வருகிறோம்.

அனைத்து கால்வாய்களிலும் துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. ஆகாயத்தாமரை மற்றும் இதர குப்பையை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மழைக்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறோம்.

மாநகராட்சியில், மழை தடுப்பு பணியில் வார்டுக்கு 10 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு வினியோகம், மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுவர். மேலும், தன்னார்வலர்கள் பலர் மாநகராட்சியுடன் இணைந்துள்ளனர். அவர்களும் மழை வெள்ள பாதிப்பு தடுப்பு பணியில் ஈடுபடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு

கடல் சீற்றம் காரணமாக, சென்னையின் பிரதான ஆறு மற்றும் கால்வாய்களின் முகத்துவாரங்களில், மணல் மற்றும் திட கழிவுகளால் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், வெள்ளநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டால், சென்னை நகரில் சேதம் அதிகரிக்கும். இதன் தாக்கம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஏற்படும்.வங்க கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு வசதியாக, முகத்துவாரங்களில் தொடர்ந்து துார்வாரும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பொக்லைன் வாகனங்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



எங்கெல்லாம் தடை

பரங்கிமலை, அரும்பாக்கத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில், கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு, தற்போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.வண்டலுார் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்கள் வருவதை தடுக்க, பூங்கா மூடப்படுவதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



ஏரிகள் நிரம்பும்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும் ராட்சத குழாயில் பாசனத்திற்கு நீர் எடுத்துவரப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி., தற்போது, 6.41 டி.எம்.சி., மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதிகபட்சமாக புழல் ஏரியில் 2.35 டி.எம்.சி.,யும், செம்பரம்பாக்கத்தில் 2.24 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைப்பது வழக்கம். அக்டோபர் மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை, நவம்பர் மாதம் முடியவுள்ள நிலையிலும், தீவிரம் அடையவில்லை. நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், போதிய நீரின்றி ஏரிகள் உள்ளன. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாசன ஏரிகளிலும் 30 சதவீதத்திற்கு குறைவாக நீர்இருப்பு உள்ளது.இதனால், சென்னையின் குடிநீர் மட்டுமின்றி பாசன தேவையை பூர்த்தி செய்வதிலும் சிக்கல் நீடித்து வந்தது. இன்று இம்மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், குடிநீர் மற்றும் பாசன ஏரிகள் நிரம்பும் என்ற நம்பிக்கையில் நீர்வளத்துறையினர் உள்ளனர்.



பரங்கிமலை, அரும்பாக்கத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில், கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு, தற்போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us