ADDED : அக் 19, 2024 12:33 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், காலடிப்பேட்டை, ஜானகியம்மாள் எஸ்டேட் 2வது தெருவைச் சேர்ந்தவர் அருள், 47; டெய்லர். இவரது மனைவி, அம்சா, 42.
மகள் ரம்யா, 19, பாரதி கல்லுாரியில், பி.எஸ்சி., கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவி. மகன் ராஜேஷ், 14, அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்.
அம்சாவுக்கு முடக்குவாதம் ஏற்பட்டு, நான்கு ஆண்டுகளாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த, 3ம் தேதி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மனைவி இல்லாமல், பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறேன் என, உறவினர்களிடம் கூறி அருள் அழுது புலம்பியிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று மதியம், 2:30 மணிக்கு, அருளின் தாய் துளசி, மகன், பேரப்பிள்ளைகளை பார்க்க வந்துள்ளார்.
கதவை தட்டி, வெகு நேரமாகியும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அருள், மின்விசிறியில் புடவையால் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மகள் ரம்யா, மகன் ராஜேஷ் ஆகியோர் கட்டிலில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளனர்.
ரம்யா, ராஜேஷை மீட்ட உறவினர்கள், திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இருவரது உடலையும் வீட்டில் வைத்து, திருவொற்றியூர் போலீசாருக்கு, உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.
போலீசார், உயிரிழந்த மூவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், ராஜேஷ் மற்றும் ரம்யா கழுத்தை இறுக்கியதற்கான தடயங்கள் உள்ளன.
மனைவி இறந்த துக்கத்தில், தன் மகன், மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து, அருள் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என, போலீசார் கூறினர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.