sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கட்டுமான இடங்களில் மாசு ஏற்பட்டால் ரூ.ஐந்து லட்சம் வரை..அபராதம்! புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு மாநகராட்சி எச்சரிக்கை

/

கட்டுமான இடங்களில் மாசு ஏற்பட்டால் ரூ.ஐந்து லட்சம் வரை..அபராதம்! புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு மாநகராட்சி எச்சரிக்கை

கட்டுமான இடங்களில் மாசு ஏற்பட்டால் ரூ.ஐந்து லட்சம் வரை..அபராதம்! புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு மாநகராட்சி எச்சரிக்கை

கட்டுமான இடங்களில் மாசு ஏற்பட்டால் ரூ.ஐந்து லட்சம் வரை..அபராதம்! புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு மாநகராட்சி எச்சரிக்கை


ADDED : மார் 06, 2025 11:14 PM

Google News

ADDED : மார் 06, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னையில் கட்டுமான இடங்களில் காற்று மாசை குறைக்கும் வகையில், புதிய வழிகாட்டுதல்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சுற்றுப்புறங்களில் காற்றில் துாசி, குப்பை பறந்தால், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற கமிஷனர் குமரகுருபரன், அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

அதன்படி, சாலை, நீர்நிலைகளில் குப்பை வீசினால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், கண்காணிப்பு பணிக்கு ரோந்து வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன. கட்டட இடிபாடு கழிவை முறையாக அகற்ற, ஏற்கனவே வழிகாட்டுதல்களை மாநகராட்சி வழங்கி உள்ளது.

புதிய வழிகாட்டுதல்

இதைத் தொடர்ந்து, சென்னையில் காற்று மாசை தணிப்பதற்காக, கட்டுமான பணியிடத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

அதன் விபரம்:

* 1 ஏக்கர் வரை பரப்பளவுள்ள திட்ட தளங்களில், வெளிப்புறத்தில் துாசி மற்றும் குப்பை பரவுவதை தடுக்க, தளத்தை சுற்றி, 20 அடி உயரமுள்ள தகரம், உலோகத் தடுப்புகள் அமைப்பது முக்கியம்

* 1 ஏக்கருக்கு அதிகமான திட்ட தளங்கள் அல்லது 230 அடி உயர கட்டடங்கள், ஆலைகளின் வெளிப்புற இடங்களில், 33 அடி உயர தகரம், உலோகத்தடுப்புகள் அமைக்க வேண்டும்

* கட்டுமான பணி நடக்கும் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் இருந்தும் துாசி துகள்கள் பரவுவதை தடுக்க, அதிக அடர்த்தி கொண்ட துணி, தார்ப்பாய், இரட்டை அடுக்கு பச்சை வலையால் மூடப்பட்டிருப்பது அவசியம். துாசிகள் உருவாகும் பகுதிகளில் தண்ணீர் தெளித்து, துாசி உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும்

* கட்டுமான பொருட்கள், தோண்டப்பட்ட மண், கட்டட கழிவு ஆகியவற்றை, தளத்தில் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் சேமிக்க வேண்டும். சாலைகள், நடைபாதையில் கொட்டக்கூடாது

'சிசிடிவி' கட்டாயம்

* துாசி, துகள்களை குறைப்பதை உறுதி செய்ய, கட்டுமான தளங்களில் உருவாகும் துாசி, குப்பை வாருதல், சுத்தம் செய்தல், தண்ணீர் தெளித்தல், துடைத்தல் போன்ற, வழக்கமான பராமரிப்பை நாள் முழுதும் மேற்கொள்ள வேண்டும்

* கட்டுமானத்தில் உருவாகும் கழிவு பொருட்களை, மூடப்பட்ட தட்டுகள், சட்டிகள் பயன்படுத்தி எடுத்துச் செல்ல வேண்டும்; அதிக சுமையை ஏற்றக்கூடாது

* அனைத்து வாகனங்களும் தளத்தில் இருந்து வெளியேறும் முன், தானாக இயங்கும் இயந்திரம் வாயிலாகவோ, கைமுறையிலோ வாகனங்களின் சக்கரங்களை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். நுழைவு, வெளியேறும் இடங்களில், அணுகு சாலைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, துாசி, சேறுகள், சாலையில் பரவுவதை தடுக்க வேண்டும்

* காற்று மாசுபாட்டை தணிப்பதை உறுதி செய்வதற்காக, கட்டட தளங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்துவதுடன், மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வுக்கு, அதன் காட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும்

* பொருட்கள், கட்டட இடிப்பாடு, அதை சார்ந்த கழிவை கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும், கட்டாயம் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்

* பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் காற்று மாசுபடுதலை தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்

* மாசுபட்ட காற்றில் உள்ள துகள்களை சுவாசிப்பதில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க சுவாச முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் போன்றவை வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மே மாதம் அமல்

இந்த விதியை மீறும் கட்டுமானங்களுக்கு, சதுர அடி பரப்பளவு அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:

டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த, உச்ச நீதிமன்ற பல அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அவற்றை பின்பற்றி, டில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில், கட்டுமான கழிவு கையாள்வது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து, நம் மாநகராட்சிக்கு ஏதுவாக வழிகாட்டு விதிகளை வெளியிட்டுள்ளோம்.

விதியை மீறும், 300 முதல் 500 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தளங்களுக்கு, 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 500 முதல் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தளங்களில், 50,000 ரூபாய்; 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள தளங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த வழிகாட்டுதல் பின்பற்றும்படி, கட்டுமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, சேறுடன் செல்லும் வாகனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும். இப்பணிகளை, திடக்கழிவுக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டு ரோந்து வாகனம் கண்காணிக்கும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள், swmcleanconstruction@gmail.comஎன்ற மின்னஞ்சலில், மக்கள் கருத்து தெரிவிக்கலாம். இவை, ஏப்ரல் மாத கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, மே மாதம் செயல்பாட்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

***






      Dinamalar
      Follow us