/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வளர்ப்பு நாய்களை தெருவில் விட்டால் அபராதம். மாநகராட்சி எச்சரிக்கை சதுப்பு நில ஆக்கிரமிப்பார்கள் மீதும் நடவடிக்கை
/
வளர்ப்பு நாய்களை தெருவில் விட்டால் அபராதம். மாநகராட்சி எச்சரிக்கை சதுப்பு நில ஆக்கிரமிப்பார்கள் மீதும் நடவடிக்கை
வளர்ப்பு நாய்களை தெருவில் விட்டால் அபராதம். மாநகராட்சி எச்சரிக்கை சதுப்பு நில ஆக்கிரமிப்பார்கள் மீதும் நடவடிக்கை
வளர்ப்பு நாய்களை தெருவில் விட்டால் அபராதம். மாநகராட்சி எச்சரிக்கை சதுப்பு நில ஆக்கிரமிப்பார்கள் மீதும் நடவடிக்கை
ADDED : ஜூலை 31, 2025 12:22 AM

சென்னை : ''வளர்ப்பு நாய்களை தெருவில் திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும். சதுப்பு நில பகுதிகளில் குப்பை, கட்டடக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க 'சிசிடிவி' கேமரா வைத்து கண்காணிக்கப்படும். சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் ஆய்வு செய்து அகற்றப்படும்,'' என, மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. அப்போது நடந்த விவாதம்:
திருவொற்றியூர் மண்டலக்குழு தலைவர் தனியரசு: சாத்தங்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான, 102 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த, நிலத்தை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிக்காமல் தடுக்க, பறவைகள் சரணாலயம் அமைக்க, மாநகராட்சி நிதி ஒதுக்கியது.
அந்நிதி திடீரென, வேறு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. நிலம் ஆக்கிரமிப்பில் சிக்குவதை தடுக்க, பறவைகள் சரணாலயம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.
மேயர், பிரியா: பறவைகள் சரணாலயம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கும்.
ம.தி.மு.க., - 139வது வார்டு, கவுன்சிலர் சுப்பிரமணி: வீட்டில் நாய் வளர்ப்போர், ஆரம்பத்தில் அதை நன்றாக பராமரிக்கின்றனர். சிறிது நாட்களுக்குப்பின் பராமரிக்க முடியாமல், சாலையில் திரிய விடுகின்றனர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை அவசியம்.
மேயர், பிரியா: தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு, 'மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு வருகிறது. இதன்வாயிலாக, வளர்ப்பு நாய்கள் அதற்கான பிரத்யேக செயலி வாயிலாக கண்காணிக்கப்படும். சாலையில் திரியவிடும் நாய்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பெருங்குடி மண்டலக்குழு தலைவர், ரவிசந்திரன்: பெருங்குடி சதுப்பு நிலம், வெள்ள தடுப்புக்கு மிகவும் முக்கியம். ஆனால், சதுப்பு நிலத்தில் கட்டட கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர்.
அங்கு, 250க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து, சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், மழைக்காலங்களில் வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது.
மேயர், பிரியா: சதுப்பு நிலம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். அந்த பகுதியில் கட்டட கழிவு கொட்டுவதை தடுக்க, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும். சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுத்து அகற்றப்படும்.
இ.கம்யூ., 42வது வார்டு கவுன்சிலர் ரேணுகா: மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர், பிரியா: ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வான, 222 ஆசிரியர்கள், மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் நியமிக்கப்பட உள்னர். இந்தாண்டு, 20,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில், 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமான சில தீர்மானங்கள்:
* சுற்றுச்சூழலை கண்காணிக்கும் வகையில், மாநகராட்சியின் 18 பூங்காக்களில், 'சென்சார்' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மேம்படுத்தும் வகையில், 75 பூங்காக்களில், 6.36 கோடி ரூபாய் மதிப்பில், 'சென்சார்கள்' அமைக்கப்படும்
* அடையாறு இந்திரா நகர், மூன்றாவது அவென்யூவில் உள்ள பழைய வணிக வளாகத்தை இடித்து,4.40 கோடி ரூபாய் மதிப்பில், 'புட் கோர்ட்' அமைக்கப்படும்
* திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் உள்ள, 46 மயான பூமிகளின் பராமரிப்பு, 'ஜெய் கே ட்ரான்ஸ்' என்ற ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்படுகிறது
* திரு.வி.க.நகர் மண்டலங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், 3.40 கோடி ரூபாயில் பராமரிக்கப்படும்
* சோழிங்கநல்லுாரில், 9.99 கோடி ரூபாயில் புதிதாக மண்டல அலுவலகம் கட்டப்படும்
* தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியின் கீழ், 205 கோடி ரூபாயில், 1,590 சாலைகள் சீரமைக்கப்படும்
* மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவருக்கும், 4.04 லட்சம் ரூபாய் செலவில், முழு உடற்பரிசோதனை செய்யப்படும்
* பெருங்குடி குப்பை கிடங்கில், 100 டன் கொள்ளளவுள்ள உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்படும்
* சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க, 46.23 கோடி ரூபாய் வாடகையில், 150 மின் மோட்டார்கள், 477 டிராக்டர் மோட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன
* பேசின்பிரிட்ஜ் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட, 23 பேருந்து தட சாலையில், 28.80 கோடி ரூபாயில் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளன
* நுங்கம்பாக்கம் கல்லுாரி பாதையை, 'ஜெய் சங்கர் சாலை' என பெயர் மாற்றப்பட உள்ளது. மணலி தியாகி விஸ்வநாததாஸ் நகரில் உள்ள பூங்காவிற்கு, கருணாநிதி பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு, 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அ.தி.மு.க., 84வது வார்டு கவுன்சிலர் ஜான் பேசுகையில், 'சென்னை மாநகராட்சியில், 3,000 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்துள்ளன. பின், எதற்காக மின்மோட்டார்களை வாடைக்கு எடுக்க வேண்டும்' எனக் கேள்வி எழுப்பினார்.
''மின்மோட்டார் மட்டும் மாநகராட்சியிடம் இல்லை. குறிப்பாக, 30 செ.மீ., வரை மழை பெய்தால், சமாளிக்க வசதியாகவே மின் மோட்டார்கள் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளது,'' என, மேயர் தெரிவித்தார்.
கூட்டத்திற்கு தாமதமாக வந்த கவுன்சிலர்களுக்கு கையெழுத்து போட அனுமதி மறுக்கப்பட்டது.