/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடு மீன்வள அலுவலகத்தில் முற்றுகை எம்.எல்.ஏ., அலுவலகத்திலும் மீனவர்கள் மனு
/
காசிமேடு மீன்வள அலுவலகத்தில் முற்றுகை எம்.எல்.ஏ., அலுவலகத்திலும் மீனவர்கள் மனு
காசிமேடு மீன்வள அலுவலகத்தில் முற்றுகை எம்.எல்.ஏ., அலுவலகத்திலும் மீனவர்கள் மனு
காசிமேடு மீன்வள அலுவலகத்தில் முற்றுகை எம்.எல்.ஏ., அலுவலகத்திலும் மீனவர்கள் மனு
ADDED : ஜன 28, 2025 12:24 AM

காசிமேடு, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து சிலர், தரமற்ற மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாக காசிமேட்டில் உள்ள மீனவ சங்கத்தைச் சேர்ந்த சிலர் மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கடந்த 25ம் தேதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு நடத்தினர். ஆறு மாதிரிகளைச் சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வெளிமாவட்ட தரமற்ற மீன்கள் விற்பனை செய்வதாக தகவல் வெளியான நிலையில், மீன்விற்பனை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்த மீன்வர்கள்.
இந்நிலையில், காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் திருநாகேஸ்வரனிடம், சென்னை - திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கம், சென்னை வாழ் மீனவர்கள் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஏழு மீனவ சங்கத்தினர், நேற்று மாலை மனு அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், பிடித்து வரும் மீன்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு முதல்தர மீன்கள் சந்தைக்கும், இரண்டாம் தர மீன்கள் கருவாடு போடுவதற்கும், மூன்றாம் தர மீன்கள் கோழி தீவனத்திற்கும் வியாபாரம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், காசிமேடு கடற்கரையில் ரசாயனம் கலந்து மீன்கள் விற்கப்படுவதாகவும், இதனால் நோய் ஏற்படுவதாகவும் தவறான தகவலை பரப்பி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய விஜேஷ் என்பவர் மீது, மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., எபினேசர் அலுவலகத்திற்கு சென்று, 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் புகார் அளித்தனர்.
பின்னர் எம்.எல்.ஏ., எபினேசர் கூறியதாவது:
காசிமேடு மீன்பிடி துறைமுகம் தான் சென்னையில் மிகவும் பழைமையானது. தரமான மீன்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தான் கிடைக்கும். என்பது தொன்று தொட்ட வழக்கமாக உள்ளது.
காசிமேட்டில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்வதாக பொய்யான தகவல் பரவியுள்ளது. ஆய்விற்கு வந்த அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை. மீன்களில் பினாயிலை ஊற்றிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம். இதற்கான ஆய்வு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

