/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 லட்சம் மோசடி ஐந்து பேர் கைது
/
ரூ.10 லட்சம் மோசடி ஐந்து பேர் கைது
ADDED : செப் 09, 2025 01:14 AM

ஆவடி, 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ய உதவிய ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிஜயன் ஹால்டர் ராமசாமி, 44; தனியார் நிறுவன ஊழியர்.
கடந்த மாதம் 15ம் தேதி, அவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு வந்த 'ஆன்லைன் டிரேடிங்' விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதில் பேசிய மர்ம நபர்கள், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
முதலில் 5,000 ரூபாய் முதலீடு செய்த போது, சிறிய தொகை கமிஷனாக கிடைத்துள்ளது. அதை நம்பி, மர்ம நபர்கள் கூறிய நான்கு வங்கி கணக்குகளில், மொத்தம் 10.25 லட்சம் ரூபாயை ஐந்து தவணையில் அனுப்பியுள்ளார்.
ஆனால், மர்ம நபர்கள் கூறியதை போல், கமிஷன் மற்றும் முதலீடு செய்த தொகையை திரும்ப எடுக்க முடியவில்லை.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமசாமி, கடந்த 26ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ஏனோக்ராஜ், 31, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி ஜோசப் நிக்கோலஸ், 37, பெரம்பூரைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் சரண், 29, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் விக்னேஷ், 30 மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அல்வின் ஜாய், 24 ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் அப்பாவி மக்களிடம் வங்கி கணக்குகளை பெற்று, 'ஆன்லைன்' மோசடி கும்பலுக்கு கொடுத்து, அதன் வாயிலாக கமிஷன் பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ஐந்து பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.