/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரட்டை கொலை வழக்கு ஐந்து பேருக்கு 'காப்பு'
/
இரட்டை கொலை வழக்கு ஐந்து பேருக்கு 'காப்பு'
ADDED : மே 13, 2025 12:27 AM
மறைமலை நகர்,காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்தவர் விமல், 21. இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 21. ரவுடியாக வலம் வந்த இருவர் மீது பல வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் அதிகாலை, காட்டாங்கொளத்துார் காந்தி நகர் பிரதான சாலை அருகில் இருவரையும், மூன்று பேர் கும்பல், அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றது.
விசாரணையில், விமலுக்கும், நித்தீஷ், 22, என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன் விமலும், ஜெகதீசனும், நித்தீஷின் நண்பர்களை தாக்கி உள்ளனர். ஆத்திரமடைந்த நித்தீஷ், நண்பர்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், 23, கரும்பூர் பகுதியைச் சேர்ந்த நேதாஜி, 23, உள்ளிட்டோருடன் சென்று, இருவரையும் வெட்டி கொலை செய்தது தெரிந்தது.
இதற்கு உடந்தையாக இருந்த நித்தீஷின் தாய் கற்பகம், 50, திருநங்கை மணிமேகலை ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
மேலும், திருக்கச்சூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த நித்தீஷ், நேதாஜி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரை, நேற்று காலை கைது செய்தனர்.
ஐந்து பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். திருக்கச்சூர் வனப்பகுதியில், போலீசார் மேற்கண்ட மூவரையும் கைது செய்ய சென்றபோது, அவர்கள் தப்ப முயன்று கீழே விழுந்ததில் நித்தீஷ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருவருக்கும் இடது கையிலும், நேதாஜிக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.