/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விடுபட்டோருக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணம் இன்ப அதிர்ச்சி! முதல்வர் பிறந்த நாளில் திடீர் வினியோகம்
/
விடுபட்டோருக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணம் இன்ப அதிர்ச்சி! முதல்வர் பிறந்த நாளில் திடீர் வினியோகம்
விடுபட்டோருக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணம் இன்ப அதிர்ச்சி! முதல்வர் பிறந்த நாளில் திடீர் வினியோகம்
விடுபட்டோருக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணம் இன்ப அதிர்ச்சி! முதல்வர் பிறந்த நாளில் திடீர் வினியோகம்
ADDED : மார் 01, 2024 11:58 PM

சென்னை, :சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 'மிக்ஜாம்' புயல் வெள்ள நிவாரண நிதி விடுபட்டு விண்ணப்பித்தோரில் பெரும்பாலானோருக்கு, நேற்று திடீரென அவர்களின் வங்கிக் கணக்கில் 6,000 ரூபாய் செலுத்தப்பட்டது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் பரிந்துரையின்படி, முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளின் போது இந்த நிதி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் விண்ணப்பித்தோரில், ஒரு பிரிவினருக்கு இந்த நிதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 2023 டிசம்பரில், 'மிக்ஜாம்' புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நான்கு மாவட்டங்களிலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் வெள்ள நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது. இந்த பணம், ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
அரிசி கார்டு வைத்திருந்தாலும் வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படவில்லை. அத்துடன், மேலும் பலருக்கு வெள்ள நிவாரண நிதி வந்து சேரவில்லை என, புகார் எழுந்தது.
இதையடுத்து, நிவாரணத் தொகை பெற விரும்புவோர், ரேஷன் கடைகளில் வழங்கும் விண்ணப்பங்களை, வங்கி கணக்கு எண்ணுடன் பூர்த்தி செய்து தருமாறும், வங்கி கணக்கில் நிவாரண தொகை செலுத்தப்படும் எனவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நான்கு மாவட்டங்களிலும் நிவாரணத் தொகை கேட்டு, 5.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களை தொடர்பு கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், பாதிக்கப்பட்ட விபரங்களுடன் அலுவலகத்திற்கு வரவழைத்து புகைப்படம் எடுத்தனர். ஆனால், இரு மாதங்களாக நிவாரணத் தொகை செலுத்தப்படவில்லை.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களும், வெள்ள நிவாரண நிதி கிடைக்காதவர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள், தொடர்ந்து மேலிடத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றனர்.
குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளைச் சேர்ந்தோர் அரசின் மீது அதிருப்தியுடன் இருப்பதால், தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலை ஒட்டி, சமீபத்தில் தி.மு.க., சார்பில், திண்ணை பிரசாரம் துவக்கப்பட்டது. இதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தோரை கட்சியினர் நேரில் சந்தித்த போது, அவர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததை உணர்ந்தனர்.
தேர்தலுக்கு முன், மக்களின் அதிருப்தியை சமாளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் நம்பிக்கை அளித்தது.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, நிவாரணம் விடுபட்டோரில் பலருக்கு, திடீரென வெள்ள நிவாரண நிதி ஒரே நேரத்தில் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. அதிருப்தியில் இருந்தோருக்கு, அரசு தற்போது வழங்கியுள்ள நிவாரணம், இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கியவர்களின் வங்கி கணக்கில் அரசின் சார்பில் நேற்று, 6,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த விபரத்தை, மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ்., வாயிலாகவே, பலரும் தெரிந்து கொண்டனர்.
அந்தந்த பகுதிகளின் கவுன்சிலர்களின் சிபாரிசின்படி தேர்வு செய்யப்பட்டோருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பதாரர்களில் 30 சதவீதத்தினருக்கு நிவாரண தொகை செலுத்தப்படவில்லை என, தெரியவந்துள்ளது.
'நிவாரணத் தொகைக்காக மொத்தம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, அதில் எத்தனை பேருக்கு நிவாரணத் தொகை செலுத்தப்பட்டது, நிராகரிக்கப்பட்டது என்ற விபரங்களை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப ஒவ்வொரு கடையிலும், எத்தனை பேர் விண்ணப்பித்தனர், அதில் நிவாரணம் வழங்கப்பட்டவர் விபரங்களை ரேஷன் கடைகளுக்கு தனித்தனியே தெரிவிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:
வெள்ள நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்களில், ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 300 - 400 பேர் வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ள நிவாரணம் 6,000 ரூபாய் வங்கி கணக்கிற்கு வந்து விட்டதாக, ரேஷன் கடைகளுக்கு வந்து நன்றி தெரிவித்தனர்.
இந்த விபரத்தை தெரிந்து, நிவாரணத் தொகை வங்கி கணக்கிற்கு வராதவர்கள், ரேஷன் கடைகளுக்கு வந்து தகராறிலும் ஈடுபட்டனர்.
வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் விடுவிக்கப்பட்டது என்ற விபரத்தை, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு தெரிவித்தால் தான், கார்டுதாரர்களின் பெயரை சரிபார்த்து தகவல் கூற முடியும். இல்லையெனில், நிவாரணம் கிடைக்காதவர்கள் பிரச்னை செய்வது தொடரக்கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

