/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநின்றவூரில் 1,000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
/
திருநின்றவூரில் 1,000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
ADDED : செப் 18, 2025 06:46 PM

திருநின்றவூர் :சென்னை புறநகரில் நேற்று அதிகாலை பெய்த மழைக்கு, திருநின்றவூர் அன்னை இந்திரா நகரில், 1,000 வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருநின்றவூர் நகராட்சியில் உள்ள அன்னை இந்திரா நகரில், 2,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், குடிநீர், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால், மழைக் காலங்களில் பெரும் பாதிப்பில் சிக்குகிறது.
நேற்று அதிகாலை மூன்று மணி நேரம் பெய்த மழைக்கு, அன்னை இந்திரா நகரில் உள்ள ஸ்ரீனிவாசா நகர், ஹிம்மத் நகர், எல்.ஐ.சி., நகர், அன்னை இந்திரா நகர் விரிவாக்க பகுதிகளில், 1,000 வீடுகளை சுற்றி, முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம், இந்திரா நகர் பகுதி மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள் வாங்க வேண்டும்' என்றனர்.
இந்நிலையில், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், சுதேசி நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை ராமதாசப்புரம், கோமதிபுரம் வழியாக கால்வாய் கட்டி வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, ராமதாசபுரத்தில் இருந்து அன்னை இந்திரா நகர் வரை, 4.30 கோடி ரூபாய் மதிப்பில், 2 கி.மீ., வடிகால்வாய் கட்டும் பணி இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கியது.
இந்த கால்வாய் இந்திரா நகர் முதலாவது விரிவாக்க பகுதியில் உள்ள சமுதாய கூடம் அருகே முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
இதனால், அன்னை இந்திரா நகரில் கழிவுநீர் தேங்கும் நிலைமை ஏற்பட்டதால், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என, அ.தி.மு.க., கவுன்சிலர் அனிதா அழகேசன், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் பணியை தொடர்ந்ததால், உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், கவுன்சிலர் அனிதா, நேற்று மதியம் நகராட்சி அலுவலகம் சென்று, வார்டு மக்கள் பாதிக்கும் வகையில் வடிகால்வாய் பணி செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார். சரியான பதில் கிடைக்காத விரக்தியில், கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து, தண்ணீரை ஊற்றினர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை மிரட்டல் நான் அ.தி.மு.க., கவுன்சிலர் என்பதால், எங்கள் வார்டில் எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. கழிவு நீரை எங்கள் வார்டில் வெளியேற்றும் வகையில் திட்டம் கூடாது என, நான் போராடியும் தீர்வு கிடைக்கவில்லை. எனக்கும், என் கணவருக்கும், ஒப்பந்ததாரர் கொலை மிரட்டல் விடுக்கிறார். வேறு வழியின்றி நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றேன். பிரச்னையை தீர்க்காவிட்டால், நாங்கள் தண்ணீரில் மூழ்கிதான் சாக வேண்டும். - அனிதா அழகேசன், அ.தி.மு.க., கவுன்சிலர்.