/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
20 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் தத்தளிக்கும் மணலி, திருநின்றவூர்
/
20 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் தத்தளிக்கும் மணலி, திருநின்றவூர்
20 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் தத்தளிக்கும் மணலி, திருநின்றவூர்
20 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் தத்தளிக்கும் மணலி, திருநின்றவூர்
UPDATED : டிச 05, 2025 07:27 AM
ADDED : டிச 05, 2025 07:07 AM

மணலிபுதுநகர்: மழைநீர் மற்றும் புழல் ஏரி உபரி நீர் திறப்பால், தண்ணீர் வடிய வழியின்றி மணலிபுதுநகர் மற்றும் அதை ஒட்டிய 20 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், செய்வதறியாமல் மக்கள் தவிக்கின்றனர். தவிர, வடப்பெரும்பாக்கம், திருநின்றவூர், நெமிலிச்சேரி ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
'டிட்வா' தொடர் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் இருந்து, நேற்று முன்தினம், அதிகபட்சமாக வினாடிக்கு 2,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
வெளியேறிய உபரி நீரால், கடை மடை பகுதிகளான, மாத்துார் - மஞ்சம்பாக்கம், பாலசுப்பிரமணியம் நகர் குடியிருப்புகளை, வெள்ளநீர் மூழ்கடித்தது.
தவிர, சடையங்குப்பம் - பர்மா நகருக்கு செல்லக்கூடிய மூன்று வழிப்பாதைகளும், புழல் உபரி நீரால் துண்டிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் உயிரை பணயம் வைத்து, வெளியே சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. இப்பகுதிகளில் வசித்தோரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு, அரசு பள்ளியில் தங்க வைத்தனர்.
மாதவரம் தாலுகா, மாத்துார் கிராமம், பாலசுப்பிரமணியம் நகர், சர்வே எண் 194, 195 ஆகிய நிலம், தொழில் துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தை சிலர், வீட்டு மனைகளாக்கி மக்களிடம் ஏமாற்றிவிட்டனர். அப்பகுதியில் பலரும் வீடுகள் கட்டியுள்ளதால், ஆண்டுதோறும் வெள்ளபாதிப்பில் இப்பகுதி சிக்குகிறது.
மணலி புதுநகரில், ஐ.ஜே.புரம், எழில் நகர் உள்ளிட்ட கிராமங்களில் தேங்கும் மழைநீர், எழில் நகர் மற்றும் ஐ.ஜே.புரம் ஆகிய இடங்களில் உள்ள ராட்சத கால்வாய் வழியாக, பொன்னேரி நெடுஞ்சாலை அடியே நீர்வழித்தடத்தில் சென்று, கொசஸ்தலை மற்றும் புழல் உபரி கால்வாய்களை சென்றடைய வேண்டும்.
ஆனால், ஐ.ஜே.புரம் கால்வாயில் இருந்து, வடிகால்வாயில் மழைநீர் செல்வதில் சிக்கல் உள்ளது. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களை, வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புழல் ஏரி நீர்வழித்தடமான விளாங்காட்டுபாக்கம், வடபெரும்பாக்கம் பகுதிகளில் வெள்ளநீர், 4 அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
புழல் ஏரியில் இருந்து எண்ணுார் கடலுக்கு செல்லும் 13.5 கி.மீ., உபரிநீர் கால்வாய் கரை, ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதன் சேதமான கரை வழியே வெளியேறிய உபரிநீர், வடபெரும்பாக்கம் முதல் மஞ்சம்பாக்கம் சந்திப்பு வரை, சாலையில் கரை புரண்டு ஓடுகிறது.
வெள்ள நீரை அகற்ற, எந்த ஒரு அதிகாரியும் நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என, விளாங்காட்டுபாக்கம், வடபெரும்பாக்கம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
300 ஏக்கர் நாசம்: தொடர் கனமழையால், மணலியில் உள்ள கடப்பாக்கம், அரியலுார் ஏரிகள், 20க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர் சுற்றியுள்ள, ஆண்டார்குப்பம், கண்ணியம்மன்பேட்டை, விச்சூர் உள்ளிட்ட பகுதிகளில், பயிரிடப்பட்டிருந்த 300 ஏக்கர்களில் வாழை, நெற்பயிர்களை 3 - 5 அடி உயரத்திற்கு மூழ்கடித்துள்ளது. இந்த தண்ணீர் வடிய சில வாரங்களாகிவிடும். அதற்குள் பயிர்கள் அழுகி பெரும் நஷ்டம் ஏற்படும் என, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், நெமிலிச்சேரி பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பை சூழ்ந்துள்ள வெள்ளம், இன்னும் வடியாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கடும் சேதம் தொடர் கனமழைக்கு கடப்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. நெற்பயிர்கள் முழுதும் மூழ்கி விட்டதால், அறுவடை செய்தாலும் பலனிருக்காது. வாழையில், 3 - 4 அடிக்கு உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. உபரி நீர் வெளியேற வழியில்லாததால், நிலைமை கைமீறி விட்டது. விவசாயிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளனர். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆர்.திருஞானசம்மந்தன், 58, விவசாயி, ஆண்டார்குப்பம், மணலி
மீள முடியாது மழை மற்றும் வெள்ளநீர் வெளியேற சரியான கட்டமைப்பு ஏதுமில்லாததால், ஆண்டுதோறும் பயிர்கள் மூழ்கி அழுகுவது வாடிக்கையாக உள்ளது. இரண்டு ஆண்டு பயிரான வாழை, ஒரு ஏக்கரில் பயிரிட, 50,000 ரூபாய் செலவாகிறது. நல்ல விளைச்சல் இருந்தால், இரண்டு லட்ச ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், இங்கு முதலுக்கே மோசமாகி விட்டது. வாழை தோப்புக்குள், 4 அடி உயரத்திற்கு வெள்ளநீர் புகுந்துள்ளது. என்னுடைய, ஒன்றரை ஏக்கர் வாழை தோப்பும், வெள்ளநீரில் மூழ்கிவிட்டது. இந்த பாதிப்பில் இருந்து, மணலி விவசாயிகளால் மீளவே முடியாது. - எம்.பாலசுப்பிரமணியம், 45, விவசாயி, ஆண்டார்குப்பம், மணலி

