/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொங்கு பிரியாணி, சேலம் உப்புகறி விதவிதமாக சுவைக்க வாய்ப்பு: மெரினாவில் உணவு திருவிழா
/
கொங்கு பிரியாணி, சேலம் உப்புகறி விதவிதமாக சுவைக்க வாய்ப்பு: மெரினாவில் உணவு திருவிழா
கொங்கு பிரியாணி, சேலம் உப்புகறி விதவிதமாக சுவைக்க வாய்ப்பு: மெரினாவில் உணவு திருவிழா
கொங்கு பிரியாணி, சேலம் உப்புகறி விதவிதமாக சுவைக்க வாய்ப்பு: மெரினாவில் உணவு திருவிழா
UPDATED : டிச 21, 2024 07:57 AM
ADDED : டிச 21, 2024 12:19 AM

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்ககம் சார்பில், மெரினாவில் ஐந்து நாள் உணவு திருவிழா நேற்று துவங்கியது. உணவு திருவிழாவை, துணை முதல்வர் உதயநிதி நேற்று மாலை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு மாவட்டம்சார்பிலும் அமைக்கப்பட்ட அரங்குகளுக்கு சென்ற அவர், பிரத்யகே உணவுகளை ருசித்தார். அவற்றை தயாரித்த, மகளிர் சுய உதவி குழுவினரை வெகுவாக பாராட்டினார்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, 180 கிலோ எடையிலான கேக் தயாரிப்பையும் அவர் துவக்கி வைத்தார்.
உணவு திருவிழாவுக்காக, 45 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 35 ஸ்டால்களில் உணவு வகைகள்; மூன்று ஸ்டால்களில் கைவினைப் பொருட்கள்; ஏழு ஸ்டால்களில் தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன.
மதுரை - கறிதோசை, கோவை - கொங்கு மட்டன் பிரியாணி, சேலம் - ஆட்டையாம்பட்டி முறுக்கு, திருநெல்வேலி - அல்வா, தேனி - காளான் நக்கெட்ஸ் உள்ளிட்ட உணவு வகைகள் உள்ளன.
என்னென்ன வகையான உணவுகள் விற்பனைக்கு உள்ளது என்பதை அறியும்விதமாக ஆங்காங்கே, 'கியூஆர்' கோடு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஸ்கேன் செய்தால், உணவு வகைகளை பார்த்து, உரிய அரங்கிற்கு சென்று ருசிக்கலாம்.
அதற்கு முன், பில் போடும் மையத்திற்கு சென்று, 'ரீ - சார்ஜ் கார்டு' வாங்க வேண்டும். அதை பயன்படுத்திதான் உணவு வகைகளை வாங்க முடியும்.
நேற்று முதல் நாள் என்றாலும், உணவுத் திருவிழா துவங்கும் முன், அரங்குகளின் விற்பனை களை கட்டியது. இந்த உணவு திருவிழா வரும், 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சென்னைவாசிகள், மாலை நேரம் கொஞ்சம் மெரினா பக்கம் போனால், பொழுதுபோக்காக அமையும் என்பதோடு, விதமான உணவுகளை ருசிக்கலாம்; குடும்பத்தோடு செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு.
------------------
கோவை கொங்கு பிரியாணியை குடும்பத்துடன் சாப்பிட்டோம்; நன்றாக இருந்தது. குழந்தைகளும் சாப்பிடும் வகையில் உணவு கிடைப்பது மகிழ்ச்சி. கை கழுவ முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை.
- கே. அண்ணாதுரை, பெரம்பூர்.
***
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவு வகைகள் சிலவற்றை நான் இதுவரை கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஒவ்வொரு நாளும், இதுவரை நான் சாப்பிடாத உணவு வகைகளை சுவைக்க உள்ளேன்.
- ஆர்.கிருத்திகா, 26, மேடவாக்கம்.
நுங்கு மில்க் ஷேக் குடித்தேன், இறால் வடை சாப்பிட்டேன். மிகவும் நன்றாக உள்ளது; ஆனால், அளவுதான் மிகவும் குறைவாக உள்ளது.
- எஸ்.அஸ்வின், 25, தேனாம்பேட்டை.