/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கத்தில் இறங்கும் வெளியூர் பயணியர்... மீண்டும் அவதி ! * தாம்பரம் வரை வெளியூர் பஸ்களுக்கு தடை அமல்
/
கிளாம்பாக்கத்தில் இறங்கும் வெளியூர் பயணியர்... மீண்டும் அவதி ! * தாம்பரம் வரை வெளியூர் பஸ்களுக்கு தடை அமல்
கிளாம்பாக்கத்தில் இறங்கும் வெளியூர் பயணியர்... மீண்டும் அவதி ! * தாம்பரம் வரை வெளியூர் பஸ்களுக்கு தடை அமல்
கிளாம்பாக்கத்தில் இறங்கும் வெளியூர் பயணியர்... மீண்டும் அவதி ! * தாம்பரம் வரை வெளியூர் பஸ்களுக்கு தடை அமல்
ADDED : மார் 04, 2025 08:51 PM

சென்னை:'வெளியூர் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்க விதிக்கப்பட்டுள்ள விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக, கிளாம்பக்கத்தில் இறங்கிய பயணியர் மீண்டும் அவதிப்பட்டனர். மாநகர பேருந்துகளில் மாறி, மாறி பயணித்து, போவதற்குள் பெரிதும் சிரமப்பட்டனர்.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கரில் பரப்பளவில், 393.71 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய பேருந்து முனையம், 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது. இங்கிருந்து ஒரே நேரத்தில் 215 பேருந்துகள், தினமும் 3,500 பேருந்து சேவைகளை இயக்க முடியும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதை அடுத்து, வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர். படிப்படியாக, கிளாம்பாக்கம் முனையம் முழு பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனாலும் விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இருந்து, சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் கணிசமானவை, தாம்பரம் வரை அனுமதிக்கப்பட்டன.
இதனால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் நெரிசல் பிரச்னை தொடர்வதாக, போக்குவரத்து துறை அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில், 'திண்டிவனம், செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை வரும் அனைத்து பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்; தாம்பரம் செல்ல அனுமதி கிடையாது' என்று அரசின் உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி வெளியூர் பேருந்துகள் தாம்பரத்துக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை, நேற்று அதிகாலை அமலுக்கு வந்தது.
போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை:
தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மட்டுமே, வெளியூர் பேருந்துகளை இயக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து பேருந்துகளின் ஓட்டுனர், நடத்துனர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.
தாம்பரம் பேருந்து நிலையம் வரை, வெளியூர் பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இல்லை என்ற நிலையில், நேற்று முதல் அமலுக்கு வந்த தடையால், பயணியருக்கு மீண்டும் அவதியை ஏற்படுத்தி உள்ளது.
வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டதால், அங்கிருந்து புறநகர் மின்சார ரயிலில்களை பயன்படுத்தி, உரிய இடங்களுக்கு செல்ல வசதியாக இருந்தது. தற்போது, இந்த வசதியும் துண்டிக்கப்பட்டு இருப்பதால், பெரிதும் அல்லாட வேண்டியுள்ளதாக, பயணியர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறந்து ஓராண்டை கடந்து விட்டது.
அங்கிருந்து இன்னும் பல்வேறு இடங்களுக்கு, போதிய மாநகர பேருந்து வசதி இல்லை. வடசென்னைக்கு மூன்று பேருந்துகள் மாறி செல்லும் நிலை உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து ரயில் வசதியும் இல்லை.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலைக்கு நடைமேம்பாலமும் அமைக்கவில்லை. கிளாம்பாக்கம் - விமான நிலையம் மெட்ரோ திட்டத்துக்கு இன்னும் பணிகளே துவங்கவில்லை.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையம் வரை அனுமதிக்கப்பட்ட வெளியூர் பேருந்துகளும், திடீரென கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டு உள்ளன. இது எந்த விதத்தில் நியாயம். இதனால், குடும்பத்தினருடன் உடமைகளை துாக்கிக்கொண்டு பயணியர் அவதிப்படுகின்றனர். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் செயல்பாட்டிற்கு வரும் வரையாவது, பேருந்துகளை தாம்பரம் வரை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாகன நெரிசலை குறைக்க, தனியார் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, பொதுபோக்குவரத்து வசதியை அதிகரிக்க வேண்டும்.
தற்போதைய போக்குவரத்து மாற்றத்தால், என்ன பலன் என்பதை ஆய்வு செய்த பிறகே கூற முடியும்.
புதிய உத்தரவால் பயணியர் பாதிக்காத வகையில், கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
நாளுக்கு நாள் வாகன பெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது. எனவே, கிளாம்பாக்கம் - விமான நிலைய மெட்ரோ ரயில் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்
பயணியர் கருத்து
மகளைப் பார்க்க, மாதம்
ஒருமுறை விருதாச்சலத்திலிருந்து தாம்பரம் வருவேன். கடந்த முறை,
தாம்பரத்திற்கு நேரடியாக பேருந்து இயக்கப்பட்டது. இம்முறை
கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது, வெளியூர் பேருந்துகள்
நிற்கும் இடத்தில் இறக்கிவிட்டதால், அங்கிருந்து 100 மீ., துாரம் 15 கிலோ
சுமையுடன் நடந்து வந்து, இங்கே மாநகர பேருந்தில் ஏறுவது சிரமமாக உள்ளது.
எனவே, தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள், கிளாம்பாக்கம் முனையத்தில்,
மாநகர பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு வந்து பயணியரை இறக்கிவிட்டு
செல்லும்படி, நடைமுறை உருவாக்க வேண்டும்.
- சையத் அலி, 58, பயணி.
மதுராந்தகத்திலிருந்து
வருகிறேன். படப்பை செல்ல வேண்டும். முன்பு, தாம்பரத்தில் இறங்கி,
அங்கிருந்து 'ஷேர் ஆட்டோ' வாயிலாக படப்பை செல்வேன். இப்போது, படப்பை செல்ல
இங்கிருந்து எந்த பேருந்தில் ஏற வேண்டும் என தெரியவில்லை. எனவே, தாம்பரம்,
படப்பை செல்ல, சிற்றுந்து இயக்கினால் நன்றாக இருக்கும்.
- வசந்தா, 63, பயணி.