/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு... இலவச ஷூ, சாக்ஸ்! அறிவித்தார் மேயர் பிரியா
/
மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு... இலவச ஷூ, சாக்ஸ்! அறிவித்தார் மேயர் பிரியா
மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு... இலவச ஷூ, சாக்ஸ்! அறிவித்தார் மேயர் பிரியா
மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு... இலவச ஷூ, சாக்ஸ்! அறிவித்தார் மேயர் பிரியா
ADDED : பிப் 22, 2024 12:23 AM

சென்னை, சென்னை மாநகராட்சிக்கு 4,727.12 கோடி ரூபாய்க்கான பட்ஜெட், மேயர் பிரியா தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு முதல் முறையாக இலவசமாக ஷூ மற்றும் சாக்ஸ் வழங்குவது, பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, வார்டு தோறும் மகளிர் உடற்பயிற்சி கூடம் அமைப்பது உட்பட 82 திட்டங்களை, மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில், மேயர் பிரியா வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:
* சென்னை மாநகராட்சியில் உள்ள 419 பள்ளிகளில் படிக்கும், 1.20 லட்சம் மாணவ - மாணவியருக்கு 8.50 கோடி ரூபாய் மதிப்பில் சீருடை வழங்கப்படும். அவர்களுக்கு அடையாள அட்டை 61 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்
எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 64,022 மாணவர்களுக்கு, 3.59 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு செட் ஷூ, இரண்டு செட் காலுறைகள் வழங்கப்படும். 255 தொடக்கப் பள்ளிகளில் தலா நான்கு கேமராக்கள், 7.64 கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்படும். மழலையர் படிப்பை நிறைவு செய்யும் 5,944 மாணவர்களுக்கு 30 லட்சம் மதிப்பில் விழா நடத்தி 'பட்டம்' சான்று வழங்கப்படும்
* தொடக்கப் பள்ளிகளுக்கு தலா 25,000 ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 30,000, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் என, பழுது பார்ப்பதற்கு 1.32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழுதடைந்துள்ள 201 பள்ளிகளின் கட்டடங்களின் மேல்தளங்கள், 25 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்
* ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பல்வேறு போட்டி தேர்வு பயிற்சி திட்டத்திற்கு, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது
* ராயப்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில், இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும். இதன் வகுப்பறைகளை பழுதுபார்க்க, புதிய இயந்திரங்கள் வாங்க, மிதிவண்டி மற்றும் சீருடை வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடப்படுகிறது
* மாணவர்களின் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, 10 ஆலோசகர்கள் தற்காலிக பணியாளர்களாக 35 லட்சம் ரூபாய் செலவில் நியமிக்கப்படுவர். 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலின விழிப்புணர்வு ஏற்படுத்த, 49 ஆசிரியர்களுக்கு, பாலின குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது
* மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல, 1.16 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு பேருந்துகள் வாங்கப்படும்
* மாணவர்களின் வருகையை 95 சதவீதத்துக்கு மேல் உறுதி செய்யும் பள்ளிகளுக்கு, 'எக்ஸலன்ட் ஸ்கூல்' என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்
சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை
* சுவாசம், தோல், காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்கு வாரம் ஒருமுறை சிறப்பு டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளிக்க 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது
* அடையாறில், 70 படுக்கைகள், மேம்பட்ட ஆப்பரேஷன் தியேட்டர், லிப்ட் வசதி, மூன்று தளங்களுடன் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். சைதாப்பேட்டை அவசர சிகிச்சை மையம் 7 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்
* கத்திவாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 10 படுக்கைகளுடன் மேம்படுத்தப்படும். 113 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, 5.09 கோடி ரூபாய்க்கு 'ஜெனரேட்டர்' கொள்முதல் செய்யப்படும். 140 நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையங்களில் 4.20 கோடி ரூபாய் மதிப்பில், 'மின் இன்வெர்ட்டர்கள் கொள்முதல் செய்யப்படும்
* சுகாதார பணியாளர்களுக்கு, மருத்துவம் சார்ந்த பயிற்சி அளிக்க 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மடிக்கணினியுடன் கூடிய எல்.சி.டி., ப்ரொஜக்டர் வழங்கப்படும். துாய்மை மற்றும் சாலை பணியாளர்களுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பில் முழு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்படும்
எம்.எம்.டி.ஏ., காலனியில் 'ஸ்பாஞ்ச் பார்க்'
* பூங்கா மற்றும் சென்டர் மீடியன் பூங்காக்களை பராமரிக்க 1.80 கோடி ரூபாயில் ஆறு தண்ணீர் டேங்கர் லாரிகள் வாங்கப்படும். பேரிடர் காலங்களில் முறிந்து விழும் மரங்களை அகற்ற, ஆறு ஹைட்ராலிக் மரம் அறுக்கும் இயந்திரம் 1.62 கோடி ரூபாய் வாங்கப்படும்
* நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் வகையில், எட்டு நீர்நிலைகள் 10 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும். மாத்துார் எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள குளத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில், 'ஸ்பாஞ்ச் பார்க்' வடிவமைக்கப்படும். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், அப்பகுதியில் மழைநீர் தேங்குவதும் தவிர்க்கப்படும்
* சூளைமேடு, இந்திரா காந்தி 2வது தெருவில், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்தை இடித்து 2.32 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படும். சூளைமேடு, கண்ணகி தெருவில், விருகம்பாக்கம் கால்வாய் குறுக்கே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு, 2.25 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படும்
2.50 லட்சம் மரக்கன்று
* சாலையோரங்கள், திறந்தவெளி இடங்களில், 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ஆறு இடங்களில், 4.33 கோடி ரூபாய் மதிப்பில் சாலையோர பூங்காக்கள் அழகுபடுத்தப்படும்
* மாத்துார் எம்.எம்.டி.ஏ., 2வது பிரதான சாலையில், ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும். பல்வேறு இடங்களில், 19 விளையாட்டு திடல்கள் 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்
* சென்னையில் 192 மயான பூமிகள் 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப்படும்
* மாநகராட்சியின் மண்டல அலுவலகம், வட்டார அலுவலகங்களில், 'தமிழ் வாழ்க, தமிழ் வளர்க' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பெயர் பலகை 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்
* மாநகராட்சியின், 1,347 நிழற்குடைகளில், குப்பை தரம் பிரித்து கொட்டும் வகையில் 1.35 கோடி ரூபாய் செலவில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்படும்.
இவ்வாறு அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது.