/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.92 லட்சம் நில மோசடி 5 பேர் கும்பல் சிக்கியது
/
ரூ.92 லட்சம் நில மோசடி 5 பேர் கும்பல் சிக்கியது
ADDED : செப் 11, 2025 02:38 AM

கொளத்துார் :மற்றொருவரின் நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம், 92 லட்சம் ரூபாய்க்கு விற்று மோசடி செய்த ஐந்து பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கொளத்துார், பெரியார் நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார், 44. இவர், 2022ல் 'பேஸ்புக்'கில் வந்த 'ரியல் எஸ்டேட்' விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவர் சொன்ன இடங்களில், கொளத்துார், பூம்புகார் நகர், 13வது தெருவில் என்ற 1,200 சதுர அடி இடத்தை வாங்க, 92 லட்சம் ரூபாய் விலை பேசியுள்ளார்.
அதே ஆண்டு அக்டோபர் மாதம், பெரம்பூரில் உள்ள அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். நந்தகுமார், தான் வாங்கிய இடத்திற்கு வேலி போட்டு பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில், 2023ம் ஆண்டு மே மாதம், அந்த நிலம் ஜெ.திலீப்குமார் என்பவருக்கு சொந்தமானது எனவும், போலி ஆவணங்கள் மூலம் ரமேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை ஏமாற்றியதும் நந்தகுமாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து, கொளத்துார் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், ஐந்து பேர் கும்பல் சேர்ந்து, போலி ஆவணங்கள் தயாரித்து, மற்றொருவரின் இடத்தை விற்றது தெரிய வந்தது.
இந்த முறைகேடிற்கு மூளையாக செயல்பட்டவர், மணலி புதுநகரைச் சேர்ந்த சையது சலாவூதின், 42, என்பதும், கொடுங்கையூரைச் சேர்ந்த அப்துல் ரசாக், 74, என்பவர், திலீப்குமார் என பெயரை மாற்றி, போலி ஆவணங்கள் தயாரித்து இடத்தை விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மற்றும் இவரது கூட்டாளிகளான கொடுங்கையூரைச் சேர்ந்த அபுபக்கர், 51, திருநின்றவூரைச் சேர்ந்த வெங்கடேசன், 55, அம்பத்துாரைச் சேர்ந்த கலியூர் ரஹ்மான், 50, ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.