/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பு அருகே குப்பை, கட்டட கழிவு கொட்டுவதால் நந்தம்பாக்கத்தில் தவிப்பு
/
குடியிருப்பு அருகே குப்பை, கட்டட கழிவு கொட்டுவதால் நந்தம்பாக்கத்தில் தவிப்பு
குடியிருப்பு அருகே குப்பை, கட்டட கழிவு கொட்டுவதால் நந்தம்பாக்கத்தில் தவிப்பு
குடியிருப்பு அருகே குப்பை, கட்டட கழிவு கொட்டுவதால் நந்தம்பாக்கத்தில் தவிப்பு
ADDED : டிச 08, 2025 05:46 AM

நந்தம்பாக்கம்: நந்தம்பாக்கத்தில் உள்ள 'டிட்கோ' நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடத்தில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதி குடியிருப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நந்தம்பாக்கத்தில், 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான இடம், வர்த்தக மையத்திற்கு எதிரே உள்ளது. அந்த இடத்தின் அருகில், நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
'டிட்கோ' இடத்திற்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் லாரிகள் வாயிலாக, குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகள் எடுத்து வந்து கொட்டப்படுகின்றன.
இந்த இடம், ஏற்கனவே பராமரிப்பின்றி இருப்பதால் பல இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளில், விஷ ஜந்துக்கள் தஞ்சமடைகின்றன. அவ்வப்போது மழை பெய்வதால் கொட்டப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசி, குடியிருப்பு மக்கள் தவிக்கின்றனர்.
எனவே, அங்குள்ள குப்பை, கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பை கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:
'டிட்கோ' காலி இடத்தில் குப்பை, கட்டுமான கழிவுகள் மற்றும் கழிவுநீர், அடையாளம் தெரியாத நபர்களால் நள்ளிரவில் கொட்டப்பட்டுள்ளது. இது குறித்து புகாரின் அடிப்படையில், காலிமனை நுழைவாயிலில், காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழிவுகளை கொட்டியோர் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அங்குள்ள குப்பை, கழிவுகள் விரைவில் அகற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

