/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரும்பிய இடமெல்லாம் குப்பை பல்லாவரத்தில் சுகாதார சீர்கேடு
/
திரும்பிய இடமெல்லாம் குப்பை பல்லாவரத்தில் சுகாதார சீர்கேடு
திரும்பிய இடமெல்லாம் குப்பை பல்லாவரத்தில் சுகாதார சீர்கேடு
திரும்பிய இடமெல்லாம் குப்பை பல்லாவரத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 28, 2025 12:53 AM

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும், நாள்தோறும் குப்பை சேகரிக்கும் பணியை, 'அவர் லேண்ட்' என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனம் முறையாக குப்பை எடுப்பதில்லை; கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்களை அலட்சியப்படுத்துவதாக, கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2வது மண்டலத்தில் அடங்கிய பழைய பல்லாவரம், குப்பை நகரமாக மாறி, திரும்பிய இடமெல்லாம் குவியல் குவியலாக தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பழைய பல்லாவரத்தில், அனைத்து சாலைகளிலும் குப்பை குவிந்துள்ளது. துாய்மை பணியாளர்கள், நாள்தோறும் முறையாக குப்பை எடுப்பதில்லை. தெருக்களுக்கு குப்பை வாகனங்கள் வருவதே இல்லை. இதனால், திரும்பிய இடமெல்லாம் குப்பை தேங்கி, பழைய பல்லாவரம் குப்பை நகரமாக மாறி வருகிறது.
துாய்மை பணியாளர்கள், பணம் கொடுத்தால் மட்டுமே வீடுகளுக்கு வந்து குப்பை எடுத்து செல்கின்றனர்.
சாரா நகர் பிரதான சாலையோரம் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகளை அகற்றாமல், அருகில் உள்ள தனியார் நிலத்தில் கொட்டுகின்றனர் .
அந்த இடம், 'மினி' குப்பை கிடங்காகவே மாறிவிட்டதால், அப்பகுதியில் துர்நாற்றம் அதிகரித்து, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். குப்பை குவியலை மாடு, நாய்கள் கிளறி, துாக்கி சென்று கண்ட இடத்தில் போடுகின்றன.
அதனால், சாலைகளில் ஆங்காங்கே குப்பை சிதறிக்கிடக்கின்றன. கழிவுநீரும் சாலையிலேயே ஓடுகிறது. அதிகாரிகள், இப்பகுதிக்கு வராததால், அவர்களுக்கு குப்பை பிரச்னை தெரியவில்லை. அதனால், மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

