/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிக்கு திரும்பாத துாய்மை பணியாளர்கள் வீடுகள், சாலைகளில் குப்பை தேக்கம்
/
பணிக்கு திரும்பாத துாய்மை பணியாளர்கள் வீடுகள், சாலைகளில் குப்பை தேக்கம்
பணிக்கு திரும்பாத துாய்மை பணியாளர்கள் வீடுகள், சாலைகளில் குப்பை தேக்கம்
பணிக்கு திரும்பாத துாய்மை பணியாளர்கள் வீடுகள், சாலைகளில் குப்பை தேக்கம்
ADDED : ஆக 17, 2025 12:37 AM

சென்னை, சென்னையில் துாய்மை பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், குப்பை பிரச்னைக்கு தீர்வை மாநகராட்சி ஏற்படுத்தாமல் இருப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதில், பணி பாதுகாப்பு இல்லை, ஊதியம் குறைக்கப்படுவதாக கூறி, துாய்மை பணியாளர்கள், 13 நாட்களாக ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராடி வந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, 13ம் தேதி நள்ளிரவில் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து துாய்மை பணியாளர்கள் இடையே, அரசுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை தவிர்க்க, மேயர் பிரியா, சில துாய்மை பணியாளர்களை வைத்து, முதல்வருக்கு நன்றி சொல்லும் நிகழ்வை நடத்தி வருகிறார்.
மேலும், நிருபர்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பது வரை மேயர் பிரியா, துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
அதேநேரம், சென்னை மாநகரில், குறிப்பாக வட சென்னையில், பெரும்பாலான மண்டலங்களில், தேக்கமடைந்துள்ள குப்பை பிரச்னையை தீர்வு காண, மாநகராட்சி எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை.
அம்பத்துார் மண்டலம், முகப்பேர் கிழக்கு, 10வது பிளாக் போன்ற பகுதிகளில், வீடு, வீடாக குப்பை எடுக்கும் வாகனம் வந்து, ஒரு வாரத்திற்கு மேலாகிறது.
அப்பகுதி மக்கள், குப்பை தொட்டி பகுதியில், வீடுகளில் தேங்கும் குப்பையை கொட்டி வருகின்றனர். குப்பை தொட்டியும் நிரம்பி தேக்கமடைந்து இருப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
அதேபோல், ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் குப்பை தேக்கமடைந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த இரு வாரங்களாக வீடுகள் மற்றும் சாலைகளில் குப்பை தேக்கம் காணப்படுகிறது. இதற்கு முன், போராட்டத்தை காரணமாக, அதிகாரிகள் கூறி வந்தனர்.
போராட்டம் முடிவுக்கு வந்தப்பின், வீடுகள், சாலைகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான முறையில் தேங்கும் குப்பைக்கு தீர்வு காணாமல், மேயர் பிரியா உள்ளிட்டோர் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில், சாலைகள் வரை குப்பை படர்ந்துள்ளது.
துாய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் அதே வேகத்தை, சென்னையில் பெரும்பாலான இடங்களில் குப்பை தேக்கமடைந்து இருப்பதை அகற்றுவதிலும், மாநகராட்சி காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.