/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாயு கசிவு விவகாரம் :பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று வகுப்பு துவக்கம்: பள்ளியில் ஒரு வாரத்திற்கு மருத்துவ குழு முகாம்
/
வாயு கசிவு விவகாரம் :பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று வகுப்பு துவக்கம்: பள்ளியில் ஒரு வாரத்திற்கு மருத்துவ குழு முகாம்
வாயு கசிவு விவகாரம் :பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று வகுப்பு துவக்கம்: பள்ளியில் ஒரு வாரத்திற்கு மருத்துவ குழு முகாம்
வாயு கசிவு விவகாரம் :பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று வகுப்பு துவக்கம்: பள்ளியில் ஒரு வாரத்திற்கு மருத்துவ குழு முகாம்
ADDED : நவ 12, 2024 08:17 PM
திருவொற்றியூர்:வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் தனியார் பள்ளியில் முதற்கட்டமாக, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் இன்று துவக்கப்படுகிறது. மாணவர்கள் நலன் கருதி, ஒரு வாரத்திற்கு மருத்துவ குழுவினர் பள்ளியில் முகாமிடவும், மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூர் கிராமத் தெருவில் உள்ள, விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 1,970 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியில், அக்., 25ல் வாயு கசிவு ஏற்பட்டதாக, 45 மாணவியர் மங்கி விழுந்தனர். மீண்டும் நவ., 4ல், பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அன்றும் வாயு கசிவு ஏற்பட்டதாக, 10 மாணவியர் மயங்கி விழுந்தனர்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பினர். மீண்டும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
அடுத்தடுத்து வாயு கசிவு ஏற்பட்டதாக பீதி ஏற்பட்டதால், மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று தரம் கண்காணிப்பில் இறங்கியது. நவ., 4 - 8ம் தேதி வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர். முதற்கட்ட ஆய்வில், வாயு கசிவு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட ஆய்வு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும் 495 மாணவ, மாணவியர் நலன் கருதி, பள்ளி திறப்பது குறித்து, வடசென்னை கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர், மாசு கட்டுபாட்டு வாரிய இணை தலைமை பொறியாளர் வாசுதேவன், சென்னை பள்ளிகல்வி துறை மாவட்ட அலுவலர் முருகன், தாசில்தார் சகாயராணி, மண்டல குழு தலைவர் தனியரசு, மண்டல உதவி கமிஷனர் புருஷோத்தம்மன், நல அலுவலர் லீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பெற்றோர் கூறியதாவது:
பள்ளியின் கல்வி தரத்தில் பிரச்னையில்லை; நிர்வாகம்தான் சரியில்லை. மாதாந்திர பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்துவதில்லை. முதல்வரை சந்தித்து குறைகளை கூற முடியவில்லை. சிறு வகுப்பறையில் அதிக மாணவர்கள் உள்ளனர்.
பாதிப்பு குறித்து பள்ளி நிர்வாகம் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஆரம்பத்திலேயே பள்ளி நிர்வாகம் எங்களிடம், 10 நிமிடங்கள் பேசியிருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. இந்த பிரச்னையை வைத்து, மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் நிர்வாகம் செயல்பட கூடாது. உரிய பாதுகாப்புடன் வகுப்புகளை துவங்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வகுப்பு துவக்கம்
கூட்ட முடிவில், வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் கூறியதாவது:
பெற்றோர் ஒத்துழைப்புடன், பொதுத்தேர்வு எழுத கூடிய, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, ஒரு வாரத்திற்கு மருத்துவ கண்காணிப்பு குழு பள்ளியில் முகாமிட்டிருக்கும். மாசுகட்டுபாட்டு வாரிய கண்காணிப்பும் தொடரும். மற்ற வகுப்புகளை படிப்படியாக துவங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
சந்தேகம் ஏற்பட்டதால், பள்ளியில் வளர்க்கப்பட்டு வந்த, 35 முயல்கள் அகற்றப்பட்டு விட்டன. போதிய மின்விசிறி அமைக்கவும், 40 பேருக்கு மேல் மாணவர்கள் இருந்தால், இரண்டு வகுப்புகளாக பிரித்து நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாயு கசிவால் பாதிப்பு ஏற்பட்டதாக, இதுவரை கண்டறியப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.