/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீலாம்பரி ராகத்தில் அற்புதம் நிகழ்த்திய காயத்ரி கிரீஷ்
/
நீலாம்பரி ராகத்தில் அற்புதம் நிகழ்த்திய காயத்ரி கிரீஷ்
நீலாம்பரி ராகத்தில் அற்புதம் நிகழ்த்திய காயத்ரி கிரீஷ்
நீலாம்பரி ராகத்தில் அற்புதம் நிகழ்த்திய காயத்ரி கிரீஷ்
ADDED : டிச 30, 2024 01:21 AM

பாபநாசம் சிவன் இயற்றிய 'கற்பக மனோகரா' எனும் கீர்த்தனையை, மலயமாருதம் ராகம், கண்டசாபு தாளத்தில் பாடிய காயத்ரி கிரீஷ், அரங்கில் இருந்தோரை தம் பக்கம் சுண்டியிழுத்தார். மார்கழியின் மாலை நேரத்திற்கு உகந்த மலயமாருதத்தை தேர்ந்தெடுத்து, கச்சேரியை ரசிக்க வைத்தார்.
பின், முத்துசாமி தீட்சிதர் இயற்றிய, 'அம்பா நீலாயதாக் ஷி' எனும் கீர்த்தனையை, நீலாம்பரி ராகம், ஆதி தாளத்தில் பாடினார். நீலாம்பரி ராகத்திற்கு உண்டான நெளிவுகளை, மிக அற்புதமாக பாடி கச்சேரிக்கு அழகூட்டினார்.
தனி ஆவர்த்தனத்தில், மிருதங்கம் பூங்குளம் சுப்பிரமணியன் தன் சொற்கட்டுகளை மிக லாவகமாக அமைத்தார். கடம் ராஜாராமனும், அவரை சமன் செய்தார்.
பின், 'வாமே பூமி சுத புரஸ்ச ஹனுமான்' எனும் ஸ்லோகத்தை ராகமாலிகையாக தொடுத்தார் காயத்ரி. ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்தை விவரிக்கும் இந்த ஸ்லோகத்தை அடுத்து, மஹாராஜா ஸ்வாதி திருநாள் இயற்றிய, 'பாவயாமி ரகுராமம்' கீர்த்தனையை, ராகமாலிகையாக வழங்கினார்.
பல வண்ண மலர்களை ஒரே மாலையில் கோர்த்தால், எப்படி கண்களை கவருமோ அதை போன்று ராகங்களை தொடுத்து, மனதை கவர்ந்தார்.
இதில், பல்லவி, அனுபல்லவியை, 'ஸாவேரி' ராகத்திலும், ஆறு சரணங்களை, நாட்டை குறிஞ்சி, தன்யாசி, மோகனம், முகாரி, பூர்வி கல்யாணி, மத்யமாவதி உள்ளிட்ட ராகங்களில் அமைத்ததோடு, இவற்றில் சிட்டை ஸ்வரங்களையும் சேர்த்து, ரசிகர்களின் உள்ளங்களை, ரக ரகமாய் கொள்ளை கொண்டார்.
ரசிகா பைன் ஆர்ட்ஸ் சார்பில், சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஆனந்த பரவசத்தில் ரசிகர்கள் திளைத்தனர்
- நமது நிருபர் -.

