ADDED : ஆக 27, 2025 12:25 AM
கொரட்டூர், கொரட்டூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 26வது தெருவில், சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. கோவிலினுள் தேவி முத்துமாரியம்மன் மற்றும் அங்காளபரமேஸ்வரி சன்னிதிகளும் உள்ளன.
முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், தற்போது அ.ம.மு.க., மாவட்ட செயலருமான வேதாச்சலம் என்பவர், கோவிலை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கோவிலின் முன்பக்க கதவை, கோவில் பூசாரி பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின், நேற்று அதிகாலை கோவில் நடையை திறந்த பூசாரி, உள்ளே சென்று பார்த்தபோது, சீரடி சாய்பாபா கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5,000 ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிந்தது.
இது குறித்து, கொரட்டூர் போலீசில் வேதாச்சலம் புகார் அளித்தார். கோவிலில் உள்ள 'சிசிடிவி' கேமராக்கள் பழுதானதால், அருகில் உள்ள குடியிருப்புகளின் 'சிசிடிவி' கேமரா பதிவுகளின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதற்கட்ட விசாராணையில், கோவிலின் முதல் மாடியில் உள்ள கதவு பூட்டப்படாமல் இருந்ததும், அதன் வழியாக இறங்கிய மர்ம நபர்கள், கோவிலுக்குள் வந்து திருடிச்சென்றதும் தெரிந்தது.