/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருத்து கேட்புடன் ஜார்ஜ் டவுன் மறுமேம்பாட்டு திட்டம்... முடக்கம் மத்திய அரசு நிதியை பெற முயற்சிக்காத சி.எம்.டி.ஏ.,
/
கருத்து கேட்புடன் ஜார்ஜ் டவுன் மறுமேம்பாட்டு திட்டம்... முடக்கம் மத்திய அரசு நிதியை பெற முயற்சிக்காத சி.எம்.டி.ஏ.,
கருத்து கேட்புடன் ஜார்ஜ் டவுன் மறுமேம்பாட்டு திட்டம்... முடக்கம் மத்திய அரசு நிதியை பெற முயற்சிக்காத சி.எம்.டி.ஏ.,
கருத்து கேட்புடன் ஜார்ஜ் டவுன் மறுமேம்பாட்டு திட்டம்... முடக்கம் மத்திய அரசு நிதியை பெற முயற்சிக்காத சி.எம்.டி.ஏ.,
ADDED : ஜூலை 12, 2025 11:13 PM

சென்னை :சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிக்கான மறுமேம்பாட்டு திட்டம், கருத்து கேட்புடன் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற முயற்சி மேற்கொள்ளாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., அமைதி காத்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில், விதிமீறல் கட்டடங்கள் பரவலாக காணப்பட்டாலும், பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு, விதிமீறல் கட்டடங்களால், ஜார்ஜ்டவுன் பகுதி விழிபிதுங்கி நிற்கிறது.
முத்தியால்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில், ஜார்ஜ்டவுன் என பெயரிடப்பட்டது. இப்பகுதி இன்றும், சென்னையில் மிக முக்கிய வணிக பகுதியாக உள்ளது.
விபரம் சேகரிப்பு
இதன் காரணமாக, இப்பகுதிக்கு வந்து செல்வோர் மட்டுமின்றி, குடியேறுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது. இதனால், இங்கு எவ்வித அனுமதியும் இன்றி, கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 2019ல் மத்திய அரசின், 'அம்ரூத்' திட்டத்தில், ஜார்ஜ் டவுன் பகுதியை மறுமேம்பாடு செய்ய முடிவானது.
சென்னை சி.எம்.டி.ஏ., தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனமான 'டுபிட்கோ' ஆகியவை இணைந்து இதற்கான பணிகளை துவக்கின. மொத்தம், 370 ஏக்கர் பரப்பளவில் உள்ள இப்பகுதி, 20 பாகங்களாக பிரிக்கப்பட்டு, கட்டடங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. கடந்த, 2022 நவ., 3ல் இதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின் இந்த திட்டம் மேம்படாமல் முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜார்ஜ் டவுன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், 11,300 கட்டடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 79 கட்டடங்களை தவிர்த்து மற்ற அனைத்து கட்டடங்களிலும் விதிமீறல்கள் இருப்பது உறுதியாகிறது.
வணிக வளாகம்
சரிசெய்ய முடியாத நிலையில் இந்த விதிமீறல்கள் இருப்பதால், இப்பகுதியை ஒட்டுமொத்தமாக மறுமேம்பாடு செய்ய திட்டமிட்டோம். இதன்படி, நில உரிமையாளர்கள் அனுமதியுடன், இப்பகுதிக்கு புதிய மனைப்பிரிவு வரைபடம் தயாரிக்கப்படும்.
இதில் பாரம்பரிய கட்டடங்கள் தவிர்த்து, பிற பகுதிகளில் அகலமான சாலைகள், பூங்காங்கள், விளையாட்டு திடல்கள், வணிக வளாகங்கள் என பிரிக்கப்படும்.
இந்த அடிப்படையில், தங்களுக்கு ஒதுக்கப்படும் நிலத்தில் உரிமையாளர்கள் அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்களை கட்டிக் கொள்ளலாம்.
இதற்கு, எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீட்டிலும் சலுகை வழங்கப்படும். ஆனால், கருத்து கேட்பு நிலையில் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இத்திட்டம் தொடர்பான அடுத்த கட்ட பணிகள் அமைதியாகி விட்டன.
குறிப்பாக, உயர் அதிகாரிகள் வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் புதிய கட்டடங்கங்கள் கட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்துவதே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்ன பிரச்னை?
ஜார்ஜ் டவுன் பகுதியில் நிலத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலத்தை மறுமேம்பாட்டுக்காக சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை. இங்கு நடக்கும் வர்த்தகத்தின் மதிப்பு காரணமாக, வியாபாரிகள் இதற்கு உடன்பட மறுக்கின்றனர். தற்போது இருக்கும் கட்டடத்தை இடித்து புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு முதலீடு செய்யவும் வியாபாரிகள் தயாராக இல்லை. இத்திட்டம் தொடர்பாக மக்களிடமும், வியாபாரிகளிடமும் நம்பிக்கை மற்றும் புரிதலை ஏற்படுத்த அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை. இதனால், மத்திய அரசின் நிதியையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- நகரமைப்பு வல்லுநர்கள்