/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதுகாப்பு தாருங்கள்; குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை
/
பாதுகாப்பு தாருங்கள்; குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை
பாதுகாப்பு தாருங்கள்; குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை
பாதுகாப்பு தாருங்கள்; குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை
UPDATED : பிப் 18, 2025 12:02 PM
ADDED : பிப் 18, 2025 11:17 AM

சென்னை: எங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குவாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கிஷோர்குமார் முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் மண், கல் குவாரிகள் தமிழக அரசிடம் விண்ணப்பித்து தமிழக அரசின் அனுமதியோடு இயங்கி வருகிறது. தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை முறைப்படி செலுத்தி வருகிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் தலைமையில் உள்ள நிறுவனத்தின் ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டு குவாரி உரிமையாளர்களை குண்டர்களை வைத்து மிரட்டி பணம் வசூல் செய்து வருகின்றனர்.
பட்டா நிலத்தில் மண் எடுத்தால் 40 முதல் 45 சதவீதமும், தமிழக அரசின் புறம்போக்கு நிலத்தில் மண் எடுத்தால் 70 சதவீதம் என நிர்ணயம் செய்துள்ளனர். புதுக்கோட்டை நிறுவனத்தின் ஊழியர்கள், வாரி உரிமையாளர்கள் கட்டாயம் பணம் தர வேண்டும் என வசூல் செய்கின்றனர். புதுக்கோட்டை நிறுவன ஊழியர்கள் குவாரி உரிமையாளரிடம் வசூல் செய்ய தமிழக அரசு எந்த அரசானையும் பிறப்பிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் தனிநபருக்கோ தனியார் நிறுவனத்திற்கோ குவாரி உரிமையாளர்களிடம் இருந்து வசூல் செய்ய இன்றுவரை எந்த உத்தரவையும் தமிழக அரசு பிறப்பிக்க வில்லை.
புதுக்கோட்டை நிறுவன ஊழியர்களிடம் குவாரி உரிமையாளர்கள் எதற்கு பணம் தர வேண்டும் என்று கேட்டால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு பணம் தர வேண்டும் என பொய்யான தகவலை கூறுகின்றனர். மேலும் தி.மு.க., ஆட்சி அமைய தமிழகத்தில் மணல் எடுக்க பெரும் தொகையை கொடுத்துள்ளோம் என பொய்யான செய்திகளை தெரிவிக்கின்றனர். அது மட்டுமில்லாமல் தி.மு.க., ஆட்சிக்கும், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் குவாரி தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உடனே புதுக்கோட்டை நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து குவாரி தொழிலாளர்களை சார்ந்து வாழும் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கனரக வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். குவாரி உரிமையாளரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.