ADDED : டிச 14, 2024 02:43 AM
சென்னை, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், இலங்கை வழியாக நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த 28 வயதான ஆண் பயணி, வருகை மற்றும் புறப்பாடு பகுதிக்கு இடையேயான, தடுப்பு பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை செல்ல வந்த மற்றொரு பயணி, தடுப்பு பகுதியின் மறுப்பக்கம் நின்றார். அப்போது, முன்னமே வந்து காத்திருந்த பயணி, தன் கைப்பையில் இருந்து பந்து போன்ற உருண்டைகளை, அவரிடம் வீசினார்.
அதை பிடித்தவர், சிறிது துாரத்தில் நின்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்தார். நடப்பதை ரகசியமாக கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள், மூன்று பேரையும் மடக்கி சோதித்தனர். அப்போது, 1.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 2.2 கிலோ தங்க பசை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

