/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 கோடி மதிப்பு தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்
/
ரூ.2 கோடி மதிப்பு தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : நவ 02, 2025 12:16 AM

சென்னை: மலேஷியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 820 கிராம் தங்க கட்டியை, சென்னை விமான நிலைய அதிகாரிகள், நேற்று பறிமுதல் செய்தனர்.
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, தனியார் பயணியர் விமானம், நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணியரை, சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணியர், மலேஷியாவிற்கு சுற்றுலா சென்று, சென்னை திரும்பியது தெரிந்தது. சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து, அவர்களின் உடைமையை சோதனை செய்த போது, இரண்டு பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவற்றை திறந்து பார்த்த போது, அதில் 820 கிராம், 24 கேரட் தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு, ஒரு கோடி ரூபாய். அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த பயணியர் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல், சில தினங்களுக்கு முன், தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, ஏர் ஏசியா பயணியர் விமானத்தில், சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று திரும்பிய ஆண் பயணியிடம் இருந்து, 750 கிராம் எடையுள்ள, 24 கேரட் துாய தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் சர்வதேச மதிப்பு, 90 லட்சம் ரூபாய். அதையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த பயணியை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

