/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5 லட்சம் சீட்டு மோசடி தலைமறைவு பெண் கைது
/
ரூ.5 லட்சம் சீட்டு மோசடி தலைமறைவு பெண் கைது
ADDED : நவ 02, 2025 12:15 AM
ஆர்.கே.நகர்: தீபாவளி சீட்டு நடத்தி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி, 44. இவர், கடந்தாண்டு பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள, ஹோட்டலில் பணிபுரிந்தார்.
அந்த ஹோட்டலின் உரிமையாளரான கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வி, தீபாவளி சீட்டு நடத்துவதாக பத்மாவதியிடம் கூறியதோடு, ஆள்சேர்த்து விடவும் கூறியுள்ளார்.
அதை நம்பி, பத்மாவதியும் அவருக்கு தெரிந்த 25 பேரை, தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டார். அதன்படி, 2024ம் ஆண்டு துவக்கம் முதல் ஐந்து லட்சம் ரூபாயை தமிழ்செல்வி வசூலித்துள்ளார்.
சீட்டு முடிந்த நிலையில், முதிர்வு தொகையை தராமல் தமிழ்செல்வி இழுத்தடித்து வந்துள்ளார். இது குறித்து, 2024 அக்., 24ம் தேதி, ஆர்.கே.நகர் போலீசில், பத்மாவதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, வழக்கில் தொடர்புடைய, தமிழ்செல்வி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், முன்ஜாமின் கோரி மனு செய்துள்ளார்.
பின், நீதிமன்ற உத்தரவின்படி, 1 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யாமலும், நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமலும், தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார்.

