/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 மாத குழந்தையின் சுவாச பாதையில் சிக்கிய மூக்குத்தி நுட்பமான சிகிச்சையில் அகற்றிய அரசு டாக்டர்கள்
/
10 மாத குழந்தையின் சுவாச பாதையில் சிக்கிய மூக்குத்தி நுட்பமான சிகிச்சையில் அகற்றிய அரசு டாக்டர்கள்
10 மாத குழந்தையின் சுவாச பாதையில் சிக்கிய மூக்குத்தி நுட்பமான சிகிச்சையில் அகற்றிய அரசு டாக்டர்கள்
10 மாத குழந்தையின் சுவாச பாதையில் சிக்கிய மூக்குத்தி நுட்பமான சிகிச்சையில் அகற்றிய அரசு டாக்டர்கள்
ADDED : அக் 10, 2025 11:53 PM
சென்னை,: பத்து மாத குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தியை, இருவேறு நுட்பமான சிகிச்சை வாயிலாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் இயக்குநர் லட்சுமி கூறியதாவது:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 10 மாத குழந்தை, தவறுதலாக தாயின் மூக்குத்தியை விழுங்கிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது, வெளியில் இருந்து உடலுக்குச் செல்லும் பொருட்கள் உணவுக் குழாய் வழியே ஜீரண மண்டலத்துக்குள் செல்லும்.
இல்லையெனில், வலது பக்க சுவாச பாதைக்குள் ஊடுருவிக்கொள்ளும். அரிதாக, குழந்தையின் இடது பக்க நுரையீரல் சுவாச பாதையின் அடிப்பகுதியில் மூக்குத்தி சிக்கிக் கொண்டது.
இக்குழந்தை உயர் சிகிச்சைக்காக, 6ம் தேதி அழைத்து வரப்பட்டது. மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவர் சரத் பாலாஜி, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டர் நிர்மல்குமார், மயக்கவியல் டாக்டர் தனலட்சுமி ஆகியோர் அடங்கிய பல்நோக்கு மருத்துவக் குழுவினர், குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.
நுரையீரல் சுவாசப் பாதையில் பரிசோதனை செய்ய, திசு மாதிரிகளை எடுக்க, 'ப்ராங்கோஸ்கோபி' எனப்படும் ஊடுகுழாய் கருவி பயன்படுத்தப்படும்.
இவை, நேராகவும், திடமாகவும் இருக்கும் அந்த குழாயை அடிப்பகுதி வரை கொண்டு செல்ல முடியாது என்பதால் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் குழாயான, 'ப்ளெக்சிபில் ப்ராங்கோஸ்கோபி' குழந்தையின் சுவாசப் பாதையில் டாக்டர்கள் செலுத்தினர்.
நுரையீரலின் கீழ் சுவாசப் பாதையில் இருந்த மூக்குத்தியை அங்கிருந்து மேல் பகுதிக்கு நகர்த்தி கொண்டு வந்தனர். பின், வெளியிலிருந்து ஏதேனும் பொருள் ஊடுருவி விட்டால் அதை இறுகப்பிடித்து வெளியே எடுக்கப் பயன்படுத்தப்படும், 'ரிஜிட் ப்ராங்கோஸ்கோபி' எனும் ஊடுகுழாயை செலுத்தி மூக்குத்தி வெளியே எடுக்கப்பட்டது.
இந்த சிகிச்சையின்போது குழந்தைக்கு தொடர்ந்து மயக்க மருந்து சிகிச்சையும் வழங்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை, இருவேறு 'ப்ராங்கோஸ்கோபி' சிகிச்சைகள் வாயிலாக நலமுடன் மீட்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.