/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடியில் ரூ.150 கோடி அரசு நிலங்கள்... கபளீகரம் அடுக்குமாடிகள் கட்டி வசூல் வேட்டை
/
பெருங்குடியில் ரூ.150 கோடி அரசு நிலங்கள்... கபளீகரம் அடுக்குமாடிகள் கட்டி வசூல் வேட்டை
பெருங்குடியில் ரூ.150 கோடி அரசு நிலங்கள்... கபளீகரம் அடுக்குமாடிகள் கட்டி வசூல் வேட்டை
பெருங்குடியில் ரூ.150 கோடி அரசு நிலங்கள்... கபளீகரம் அடுக்குமாடிகள் கட்டி வசூல் வேட்டை
ADDED : ஜூன் 05, 2025 11:01 PM

பெருங்குடி : சென்னை மாநகராட்சி பெருங்குடியில், திறந்த வெளி நிலமாக பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட, 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. சிலர் போலி ஆவணங்கள் வாயிலாக பட்டா பெற்று, அடுக்குடி வீடுகள், வணிக வளாகங்களை கட்டி வசூல் நடத்தி வருகின்றனர். நிலத்தை மட்டுமல்ல, 'இது மாநகராட்சி பகுதி' என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை மாயமாகிவிட்ட நிலையில், அதைக்கூட மீட்க முடியாமல் மாநகராட்சி திணறி வருகிறது.
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 182வது வார்டில் உள்ள சந்தோஷ் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகள், 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டன.
அங்கு, 'பர்மா இந்தியன்ஸ் கோ - ஆப்பரேட்டிவ் ஹவுஸ் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் சொசைட்டி லிமிடெட்' என்ற நிறுவனம் சார்பில், வீட்டு மனைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன.
பொதுவாக மனைப்பிரிவுகள் ஒதுக்கம்போது, 10,000 சதுர மீட்டருக்கு மேலானது என்றால், அவற்றில் 10 சதவீத நிலத்தை, ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்த வெளி ஒதுக்கீட்டு நிலமாக உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டும். அந்த இடத்தில் பூங்கா, விளையாட்டு திடல் என, பொது பயன்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன்படி, சந்தோஷ் நகர் வீட்டு மனை பிரிவுகள் உருவாக்கத்தின்போது, சந்தோஷ் நகரில் பூங்கா அமைப்பதற்காக, 4 கிரவுண்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. தவிர, அங்குள்ள ஒரு பூங்காவிற்கு செல்லும் வகையில், 1 கிரவுண்ட் பரப்பு வழித்தடமும், பள்ளிக்கூடத்திற்கு சொந்தமாக, 3 கிரவுண்டு இடமும் ஒதுக்கப்பட்டது.
இந்த இடங்களை ஒதுக்கி பல ஆண்டுகள் ஆனதால், அதை முறையாக கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதனால், ஓ.எஸ்.ஆர்., இடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. வீடு, வணிக வளாகம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.
தவிர, ஓ.ம்.ஆர்., சாலை, பர்மா காலனியில், பூங்கா இடம் 2.5 கிரவுண்ட் மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 10 கிரவுண்ட் நிலமும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.
அந்த வகையில், சந்தோஷ் நகர் மற்றும் பர்மா காலனியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, 20.5 கிரவுண்ட் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய் இருக்கும் என்பதால், அவற்றை மீட்கும் நடவடிக்கைகளில், மாநகராட்சி அதிரடி காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் கூறியதாவது:
பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை, 'பர்மா இந்தியன்ஸ் கோ - ஆப்ரேட்டிவ் ஹவுஸ் கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் சொசைட்டி லிமிடெட்' சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்காமல், தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
இதுகுறித்து, பகுதிவாசிகள் அளித்த புகாரின்படி, வட்டார துணை ஆணையர், 'இந்த நிலங்கள், சென்னை மாநகராட்சிக்கு உரியவை' என, அறிவிப்பு பலகை வைத்தார். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் அறிவிப்பு பலகையை அகற்றிவிட்டனர்.
தற்போது, சந்தோஷ் நகர் பூங்கா இடத்தில் தகர கூரை வேயப்பட்டுள்ளது. தவிர, பள்ளிக்கென ஒதுக்கிய இடத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது. மற்றொரு பூங்காவிற்கு செல்லும் வழி, லாரி நிறுத்தமாக மாற்றப்பட்டு உள்ளது.
பர்மா காலனி பூங்கா நிலத்தில், பெரிய அளவில் வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. அதில், தனியார் வங்கி, உடற்பயிற்சி கூடம் மற்றும் கடைகள் செயல்படுகின்றன. ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிய கட்டடத்திற்கு, உரிமையாளர் வாடகை பணம் வசூலித்து வருகிறார். தவிர, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றொரு இடத்தை சுற்றி, தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
ஆக்கிரமிப்பில் உள்ள 20.5 கிரவுண்ட நிலங்களை மீட்டால், பர்மா காலனி பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கலாம். இதன் வாயிலாக மாநகராட்சிக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும்.
தவிர, மற்றொரு இடத்தில் தாலுகா அலுவலகம் அமைக்கலாம். பல்நோக்கு கட்டடங்கள் கட்டலாம்.
ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க துணிச்சலுடன் செயல்பட்ட அதிகாரி, அரசியல் பின்புலத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக வந்துள்ள அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, அரசுக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் நிலங்களை மீட்டு, பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்கிரமிப்பு கட்டடங்களின்
பட்டா ரத்து செய்யப்படும்
பெருங்குடி சந்தோஷ் நகர் மற்றும் பர்மா காலனியில், தற்போது ஆக்கிரமிப்பில் உள்ள 20.5 கிரவுண்ட் பரப்புள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது. நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்கள், முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். அந்தப் பட்டாவை ரத்து செய்யும்படி, வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியருக்கு, மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், பட்டா ரத்து செய்யப்படும்.
அதன்பின், ஆக்கிரமிப்பு நிலம், அதில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு, மாநகராட்சி வசம் மொத்த நிலமும் கொண்டுவரப்படும்.
- சென்னை மாநகராட்சி அதிகாரி.