/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூர் - உத்தண்டி 4 வழித்தட மேம்பாலம் ரூ.2,100 கோடியில் அரசு டெண்டர் வெளியீடு
/
திருவான்மியூர் - உத்தண்டி 4 வழித்தட மேம்பாலம் ரூ.2,100 கோடியில் அரசு டெண்டர் வெளியீடு
திருவான்மியூர் - உத்தண்டி 4 வழித்தட மேம்பாலம் ரூ.2,100 கோடியில் அரசு டெண்டர் வெளியீடு
திருவான்மியூர் - உத்தண்டி 4 வழித்தட மேம்பாலம் ரூ.2,100 கோடியில் அரசு டெண்டர் வெளியீடு
ADDED : ஆக 27, 2025 12:25 AM
சென்னை இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை, நான்கு வழித்தட மேம்பால சாலை அமைப்பதற்காக, 2,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு பகுதியாக, திருவான்மியூர் - அக்கரை இடையிலான, 10.5 கி.மீ., நான்கு வழிச்சாலை உள்ளது. இச்சாலை வழியாக சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், பயணியர் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
எதிர்காலத்தை கருத்தில் வைத்து, இச்சாலை ஆறுவழியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. நிலம் எடுப்பு பணிக்கு மட்டும், 778 கோடி ரூபாயும், சாலை விரிவாக்க பணிக்கு, 174 கோடி ரூபாயும் செலவிடப்பட்டு உள்ளது. சாலையின் இரண்டு புறங்களிலும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதால், வாகன போக்குவரத்து வரும் காலங்களில் இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதில், திருவான்மியூர் -- உத்தண்டி சாலை என்பது, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. எனவே, திருவான்மியூர் ரயில் நிலையம் வழியாக வரும் வாகனங்கள், நேரடியாக உத்தண்டி வரை செல்வதற்கு, 14.4 கி.மீ., உயர்மட்ட மேம்பாலச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட்டில், மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இங்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக பணிகள் மேம்பால சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக 2100 கோடி ரூபாய் ஒதுக்கி டெண்டர் வெளியிட்டு, ஒப்பந்ததாரர் தேர்வை, மாநில நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.
இது குறித்து, மாநில நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருவான்மியூர் -- உத்தண்டி சாலை, எந்நேரமும் போக்குவரத்து அதிகமுள்ள சாலை. குறிப்பாக, பீக் ஹவர்களில் உத்தண்டியை கடக்க, 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை செலவாகிறது.
மேம்பால சாலை அமைக்கும்பட்சத்தில் 20 நிமிடங்களிலேயே கடந்துவிட முடியும். மேம்பாலச் சாலை பணிக்கு, 52 லட்சம் ரூபாய் செலவு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இப்பணிக்கு, 2,100 கோடி ரூபாய் தேவைப்படும் என, தோராயமாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேம்பாலம் கட்டுமானம் மட்டுமின்றி, மின்சார கம்பங்கள், கேபிள்கள், குடிநீர் வாரிய குழாய்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளும், இதில் அடங்கும்.
பொது மற்றும் தனியார் பங்களிப்பு என்ற திட்டத்தின் கீழ், மேம்பாலச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, 40 சதவீத நிதியை மாநில அரசும், 60 சதவீத நிதியை கட்டுமானப் பணி மேற்கொள்ளும், தனியார் நிறுவனமும் வழங்கும்.
பணிகள் முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின், கட்டுமான நிறுவனம் செலவழித்த நிதியை, தமிழக அரசு வழங்கும். அதன்பின், ஐந்து ஆண்டுகள் வரை சாலை பராமரிப்பு பணியை, கட்டுமான நிறுவனம் தொடர வேண்டும். சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் எதுவும் வசூல் செய்யப்படாது.
டெண்டரில் கோரப்பட்டுள்ள நிதி என்பது தோராய மதிப்பீடு தான். எந்த நிறுவனம் குறைவாக விலைப்புள்ளியை பதிவு செய்கிறதோ, அந்த நிறுவனத்திற்கு பணிகள் வழங்கப்படும். கட்டுமானத்திற்கு ஒரு கி.மீ.,க்கு எவ்வளவு செலவாகும் என்ற விபரங்கள், டெண்டர் இறுதி செய்த பின் தான் தெளிவாகும்.
ஏற்கனவே, மாமல்லபுரம் - புதுச்சேரி இடையில், 1,270 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறுவழிச்சாலை விரிவாக்க பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருகிறது. அத்துடன் மேம்பாலச் சாலை பணிகள் முடிந்தால், சென்னை - புதுச்சேரி இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் வரை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.