/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தியாகியின் கொள்ளுப்பேரனுக்கு 'சீட்' கே.வி., பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
/
தியாகியின் கொள்ளுப்பேரனுக்கு 'சீட்' கே.வி., பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
தியாகியின் கொள்ளுப்பேரனுக்கு 'சீட்' கே.வி., பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
தியாகியின் கொள்ளுப்பேரனுக்கு 'சீட்' கே.வி., பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 22, 2025 12:22 AM
சென்னை, சுதந்திர போராட்ட தியாகியின் கொள்ளுப்பேரனுக்கு, பள்ளியில் இடம் ஒதுக்க கோரிய மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்குன்றத்தை சேர்ந்த கே.சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு:
என் தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. நேதாஜியின் இந்திய தேசிய படையில் பணியாற்றியவர். ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் என் தாத்தாவுக்கு, சுதந்திர போராட்ட தியாகிக்கான பென்ஷன் கிடைத்தது. தியாகிகள் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு, மத்திய அரசு கல்வி நிலையங்களின் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உறுதி செய்துள்ளது.
என் தாத்தாவின் கொள்ளு பேரனான என் மகனுக்கு, தியாகிகள் குடும்பத்திற்கான இட ஒதுக்கீட்டில், அண்ணாநகர் கேந்திரிய வித்யாலயாவில் முதல் வகுப்பில் சேர்க்கை கோரி, கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கு பல முறை நான் அனுப்பிய மனு பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, மனுவை பரிசீலித்து, என் மகனுக்கு கே.வி., பள்ளியில், தியாகிகள் குடும்பத்திற்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.நந்தகோபாலன் ஆஜராகி, ''கே.வி., பள்ளியில், தியாகிகள் குடும்பத்திற்கான இட ஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்க விதிகள் இருந்தும், மனுவை பரிசீலிக்கவில்லை,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, 'மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பு, அண்ணாநகர் கே.வி., பள்ளிக்கு உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.
***

